டெல்லி: வேலையின்மை காரணமாக, நாடு முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில்  9,140 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், கடனை செலுத்த முடியாதது காரணமாக 16ஆயிரம்  பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள தாகவும் மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மோடி அரசின் தவறான கொள்கை காரணமாகவே நாட்டில் வேலையின்மை அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய அமைச்சரின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக நாட்டு மக்கள் சொல்லொனா துயரத்துக்கு ஆளாகி உள்ளனர். வியாபாரிகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர். அதுபோல நிறுவனங்கள் மூடப்பட்டதால் லட்சக்கணக் கானோர் வேலைவாய்ப்பும் பறிபோனது. ஏற்கனவே பிரதமர் மோடி தலைமையிலான மத்தியஅரசும் பதவி ஏற்றது முதல் நாட்டில் வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்று ஊரடங்கால் அது மேலும் அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் உறுப்பினர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய்,

 நாடு முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் வேலை கிடைக்காத வேதனையில் 9,140 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக  தெரிவித்துள்ளார்.  அதன்படி, கடந்த 2018ம் ஆண்டில்  2,746 பேரும்,  2019ம் ஆண்டில்  2,851 பேரும், 2020ம் ஆண்டில்  3540 பேரும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், வாங்கிய கடனை செலுத்த முடியாமல், 16ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன், புதிய வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்கும் வண்ணம் முதலாளிகளுக்கு உதவ ஊக்குவிப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் கூறினார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் அவலத்துக்கு இதுவே சாட்சி என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.