டெல்லி: நாடு முழுவதும்  10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கான 2ஆம் கட்ட பருவத் தேர்வுகள் தேதிகளை மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுகள் ஏப்ரல் 26ந்தி தொடங்கும் என்றும், அது நேரடித் தேர்வாக நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சிபிஎஸ்இ பள்ளி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்கட்ட பருவத்தேர்வுகள் (Mid-Term Test) கடந்த ஆண்டு (2021) நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து 2ஆம் கட்ட பருவத் தேர்வுகளை நடத்துவது குறித்து மத்திய இடைநிலை கல்வி வாரிய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

அதையடுத்து 2வது கட்ட பருவத்தேர்வுகள் ஏப்ரல் 26ந்தி தொடங்கும் என்றும் வெளியிடப்பட்டு உள்ளது. தேர்வுகள் குறித்த முழு அட்டவனை விரைவில் வெளியிடப்பட இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து கூறிய சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ், 2வது பருவத் தேர்வு தொடர்பாக பல்வேறு கல்வி நிபுணர்கள், பள்ளிகளின் தாளாளர்களுடன் கலந்துரையாடிய பின்னர் மற்றும் நாட்டில் உள்ள கோவிட்-19 தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு வாரியம் 2 தேர்வுகளை ஆஃப்லைனில் நடத்த முடிவு செய்துள்ளது” என்று கூறினார்.