டில்லி:

நாடு முழுவதும் 11.44 லட்சம் பான் கார்டுகளின் செயல்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் ராஜ்யசபாவிற்கு எழுத்துப்பூர்வ பதிலளித்துள்ளார். அதில், ‘‘ஒரே நபருக்கு பல பான் கார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆட்களே இல்லாமலும் பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தவறான அடையாளங்களுடனும் பான் கார்டுகள் வழங்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

மேலும், அந்த பதிலில், ‘‘இத்தகைய பான் கார்டுகளை புதிய சாப்ட்வேர் மூலம் மதிப்பீடு அதிகாரியே ரத்து செய்யவும் அல்லது செயல்பாட்டை துண்டிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தங்களது பான் கார்டு செயல்பாட்டில் உள்ளதா என்பதை www.incometaxindiaefiling.gov.in என்ற இணைய தள முகவரியில் நுழைந்து சர்வீஸ் பிரிவில் ‘Know your PAN என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

இதன் பின்னர் தோன்றும் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இதை சப்மிட் செய்தவுடன் மற்றொரு பக்கத்தில் உங்களது பதிவு செய்யப்பட்ட செல்போன் நம்பருக்கு ஒடிபி வரும். அதை பதிவு செய்தவுடன் உங்களது பான் ரத்து செய்யப்பட்டுள்ளதா? செயல்பாட்டில் உள்ளதா? என்பது தெரியவரும்.

மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருந்தால் மேலும் சில தகவல்களை கேட்கும். இதை தகவல்களை பதிவு செய்தால் முடிவு தெரிய வரும்’’ என்று தெரிவித்துள்ளார்.