சென்னை:
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு லண்டன் பாராளுமன்றத்தில் விருது வழங்கப்பட்டது.
சென்னை மேயராக பணியாற்றியுள்ள தற்பொழுதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாரத்தான் உள்ளிட்ட உடல் நலம் சார்ந்த விளையாட்டுகளிலும் ஆர்வம் கொண்டவர். அவர் பல்வேறு மாரத்தான் போட்டிகளிலும் பங்கு கொண்டுள்ளார். அண்மையில் மத்திய அமைச்சரைச் சந்திக்கச் சென்றபொழுதுகூட டெல்லியில் காலை வேளையில் விளையாட்டு உடையில் அவர் ஓட்ட பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி விளையாட்டு மீதான அவரது ஆர்வத்தை வெளிக்காட்டியது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றபின் திறம்படச் செயலாற்றி கரோனா ஒரு நாள் தொற்று எண்ணிக்கையைக் குறைத்தது பெரும் சாதனையாகப் பார்க்கப்பட்ட நிலையில் பலதரப்பிலிருந்து பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் லண்டன் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள ‘ஹவுஸ் ஆஃப் காமென்ஸ்’ அரங்கில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் ‘அவுட் ஸ்டாண்டிங் ரெஸ்பான்ஸ் ஃபார் கரோனா’ என்ற தலைப்பில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு விருது வழங்கப்பட்டது.
இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரது ட்விட்டர் பக்கத்தில், ‘லண்டன் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள HOUSE OF COMMONS அரங்கில் நேற்று நமக்கு வழங்கப்பட்ட “விருதை” எனது மகன் மருத்துவர் சு.இளஞ்செழியன், மருமகள் மருத்துவர் கிரீத்தா இளஞ்செழியன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்’ எனப் பதிவிட்டுள்ளார்.