சசிகலா பதவி ஏற்பது எப்போது?: ஓபிஎஸ் பதில்
சென்னை:
பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்பது எப்போது என்ற கேள்விக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் கூறியுள்ளார்.
இன்று காலை நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழு தீர்மானத்தை பெற்றுக் கொண்ட சசிகலா பதவி ஏற்க சம்மதம் தெரிவித்ததாக பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். இதையடுத்து ஜனவரி 2ம் தேதி பதவி ஏற்பார் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் டிசம்பர் 31ம் தேதி பதவி ஏற்பார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, வேலுமணி, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
பதவி ஏற்பு விழா தலைமை அலுவலகத்தில் தான் நடைபெறும். இது தொடர்பான ஆலோசனை தான் தற்போது நடந்ததாக கட்சியினர் தெரிவித்தனர்.