சென்னை: த.மா.கா கட்சி தலைவர் ஜி.கே.வாசனுடன் ஓ.பி.எஸ் தனது அணியினருடன் சென்று சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணி சார்பில் தாமாகா போட்டியிட்ட நிலையில், தற்போது அங்கு திருமகன் ஈவேரா மறைவு காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலில், தமாகா போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் ஜிகே வாசன் அறிவித்துள்ளார். முன்னதாக அவருடன் எடப்பாடி தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், வாசன், எடப்பாடிக்கு ஆதரவான தனது நினைப்பாட்டை அறிவித்தார்.

இந்த நிலையில்,  இன்று காலை, ஓபிஎஸ் தனது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உடன் திடீரென ஜிகே வாசன் வீட்டுக்கு சென்று சந்தித்து பேசினர். ஏற்கனவே எடப்பாடி தரப்பு ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில்,  ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும், நாங்களும் போட்டியிடுவோம் என கூறி வருகின்றனர்.

இந்த நிலையில்,  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் உடன் ஓ.பி.எஸ் அணியினர் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது, தங்கள் தரப்புக்கு ஆதரவு அளிக்கும்படி ஓ.பி.எஸ் கோரியுள்ளார்.

ஏற்கனவே, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் உடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.