தமிழக முதலமைச்சராக நீடிக்கும் ஓ.பன்னீர்செல்வம்  தான் சார்ந்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் சசிகலா மீது கடும் குற்றச்சாட்டுக்களை வைத்தார். இதனால் அவரது கட்சிப் பொருளாளர் பதவி பறிக்கப்படுவதாக சசிகலா அறிவித்தார். ஆனால், “தற்காலிக பொதுச்செயலாளரான அவருக்கு பதவியை பறிக்கும் அதிகாரம் இல்லை” என்று ஓ.பி.எஸ். தெரிவித்தார்.

இந்த நிலையில் கட்சி கணக்கு வைத்துள்ள வங்கி கிளைகளான மயிலாப்பூர் உள்ள கரூர் வைஸ்யா மற்றும் போங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கி கிளைகளுக்கு கணக்கை முடக்க கோரி வங்கிக் கிளைகளுக்கு ஓ.பி.எஸ். கடிதம் அளித்துள்ளார்.

அந்த கடிதத்தில், “அ.தி.மு.க-வின் விதி எண் 20,  துணைப்பிரிவு 2-ன் படி, கட்சியின் முக்கியத் தலைவர்கள், பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். புரட்சித்தலைவி அம்மாவின் மறைவிற்குப் பிறகு, கட்சியின் பொதுச்செயலாளர் பதவி வெற்றிடமாகத்தான் உள்ளது. இந்த விதியின் படி, இனிதான் பொதுச்செயலாளர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கட்சியின் பொதுச்செயலாளர் பதவி வெற்றிடமாக உள்ளதால், விதி எண் 20, துணைப்பிரிவு 5-ன் படி, மத்திய நிர்வாகிகள் குழுவின் உறுப்பினர்கள், துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோர் புதிய பொதுச்செயலாளர் நியமிக்கப்படும் வரை, கட்சியின் நிர்வாகத்தை கவனித்துக்கொள்ள முடியும். புரட்சித்தலைவி அம்மா அவர்களால் நியமிக்கப்பட்டு, இன்னும் நான் பொருளாளராக நீடிப்பதால், எனது உத்தரவின்றி வங்கிக் கணக்கில் எந்த பணப் பரிமாற்றமும் மேற்கொள்ளக்கூடாது” என்று ஓ.பி.எஸ். கூறியுள்ளார்.