புதுடெல்லி:
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மார்கரேட் ஆல்வா அறிவிக்கப்பட்டுள்ளார்.

குடியரசு துணைத் தலைவருக்கான எதிா்க்கட்சிகளின் வேட்பாளரைத் தோ்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மார்கரேட் ஆல்வா அறிவிக்கப்பட்டுள்ளார்.

மார்கரட் அல்வா 1975 முதல் 1977 முடிய கர்நாடகா மாநில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் இணைச் செயலராகவும், 1978 முதல் 1980 முடிய கர்நாடகா மாநில பொதுச்செயலராகவும் பதவியில் இருந்தவர். இவரது மாமியார் வயலெட் அல்வா, இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையின் துணைத் தலைவராக செயல்பட்டவர். 2004 மற்றும் 2009 ஆண்டுகளிடையே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலராக பணியாற்றியவர்.

மார்கரட் ஆல்வா மாநிலங்களவையின் உறுப்பினர் பதவிக்கு, 1974, 1980, 1986 மற்றும் 1992 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் மாநிலங்களவைத் துணைத் தலைவராகவும், நாடாளுமன்ற விவகாரத் துறை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் ராஜங்க அமைச்சராகவும் பணியாற்றியவர்.

ராஜீவ் காந்தி அமைச்சரவையில் மனித வள மேம்பாட்டுத் துறையில் கேபினட் தகுதி பெற்ற அமைச்சராக பதவியில் இருந்தவர். 1999-இல் 13வது மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் உத்தராகண்ட், இராஜஸ்தான், குஜராத் மற்றும் கோவா மாநிலங்களில் ஆளுநராக பதவி வகித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் ஜெக்தீப் தங்கர் என்று நேற்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகது.