புதுடெல்லி:
நாட்டின் 15-வது குடியரசு தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது.

இத்தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக திரெளபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மொத்தமுள்ள 10.87 லட்சம் ஓட்டு மதிப்பில், தற்போதைய நிலையில், முர்முவுக்கு, 6.67 லட்சம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.குடியரசு தலைவர் தேர்தலையொட்டி, டில்லியில் உள்ள பாராளுமன்ற வளாகம் மற்றும் மாநில சட்டசபைகளில் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஓட்டுச் சீட்டு முறையிலேயே தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக சிறப்பு மை உடைய பேனா பயன்படுத்தப்படும்.எம்.பி.,க்களுக்கு பச்சை நிறத்திலும், எம்.எல்.ஏ.,க்களுக்கு இளம்சிவப்பு நிறத்திலும் ஓட்டுச் சீட்டு அச்சிடப்பட்டுள்ளது.

காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை ஓட்டளிக்கலாம். பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று கூடுவதால், பெரும்பாலான எம்.பி.,க்கள், பாராளுமன்ற வளாகத்திலேயே ஓட்டளிக்க உள்ளனர்.

வரும் 21ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. வரும் 25ம் தேதி புதிய குடியரசு தலைவர் பதவியேற்க உள்ளார்.