பெங்களூரு: கர்நாடகா ஹிஜாப் சர்ச்சை குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததை கண்டித்து,  மக்களவையில் காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஹிஜாப் அணிந்து வெளிநடப்பு செய்தனர்.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப் பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த மாணவிகள் போராடிய நிலையில், அவர்களுக்கு எதிராக மற்ற மதத்தை சேர்ந்தவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.  ஹிஜாப் அணியும் மாணவிகளை வகுப்புக்குள் அனுமதித்தால் காவித் துண்டு அணிந்த எங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் கர்நாடகாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பல கல்லூரிகள், பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையும்   கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின்போது,  கருத்து தெரிவித்த நீதிபதி,  ‘அரசியலமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.  என்று தெரிவித்ததுடன், போராட்டம் நடத்துவது, வீதிக்கு செல்வது, கோஷம் எழுப்புவது, மாணவர்களைத் தாக்குவது, மாணவர்கள் பிறரைத் தாக்குவது, இவை நல்ல செயல் அல்ல. அனைவரும் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது.

இந்த நிலையில், ஹிஜாப் விவகாரம் இன்று மக்களவையிலும் எதிரொலித்தது. ஹிஜாப் விவகாரம் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், அதற்கு மக்களவை சபாநாயகர் அனுமதி மறுத்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ்  திமுக உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஹிஜாப் அணிந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த வெளிநடப்பில் காங்கிரஸ், திமுக, ஐயுஎம்எல், சிபிஎம், சிபிஐ, விசிகே, ம.தி.மு.க., மற்றும் ஜே.எம்.எம் ஆகிய கட்சிகள்  வெளிநடப்பு செய்தன.

முன்னதாக,  ஹிஜாப் அணிவது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி ஹிபி ஈடன் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.