டெல்லி: மக்கள் கொரோனா தடுப்பு நடைமுறைகளை கடைப்பிடிப்பதை பொறுத்தே கொரோனாவின் மூன்றாவது அலை பரவலுக்கு வாய்ப்பு ஏற்படும் என தேசிய நோய்த்தடுப்புக்கான தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவின் கொரோனா பணிக்குழு தலைவர்  டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு  30ஆயிரத்தில் இருந்து 40ஆயிரம் வரை ஏறி இறங்கி வருகிறது. ஒட்டுமொத்த பாதிப்பில் 70 சதவிகிதம் கேரளாவில் பதிவாகிறது. இதனால், சில மாநிலங்களில் கொரோனா 3வது அலை தொடங்கி உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் என்.கே.அரோரா, விடுமுறை நாட்கள் மற்றும் வரும் பண்டிகை காலங்களில் மக்கள் கொரோனா தடுப்பு நடைமுறைகளை கடைப்பிடிப்பதை பொறுத்தே மூன்றாவது அலை அமையும் என்று  தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் இந்தியாவில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. இந்த மாதிரியான சூழ்நிலைகளில் மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாகவும் கட்டாயமாகவும் பின்பற்ற வேண்டும். இதை அந்தந்த மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா தொற்று பரவலானது,  மக்கள் அதிகமாக கூடுகின்ற சமூக மற்றும் மதக் கூட்டங்களின் மூலமே பரவுகிறது. தற்போது பரவி வரும்  டெல்டா வைரஸ் மிக வேகமாக பரவும் தன்மைக் கொண்டது. அதனால், விடுமுறை நாட்கள் மற்றும்  வரும் பண்டிகை காலம் என்பதால், மக்கள் அதிகளவில் கூட்டம் கூடி, முறையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற தவறினால் பெரியளவில் தொற்று பரவுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

தொற்று பரவலை தடுக்க மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், இப்போது உள்ளது போல நாடு இதே நிலையில் இருக்க வேண்டுமென்றால், அடுத்து வரும் இரண்டு-மூன்று மாதங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும்,   மக்கள் கொரோனா தடுப்பு நடைமுறைகளை கடைப்பிடிப்பதை பொறுத்தே மூன்றாவது அலை அமையும்” என்று  தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, செய்தியளார்களிடம் பேசிய டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா,” நாட்டில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருப்பினும் வரவிருக்கும் பண்டிகை காலம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பெரியளவிலான கூட்டங்கள் போன்ற சூப்பர் பரவலுக்கு வழிவகுக்கும் நிகழ்வுகள்தான் மூன்றாவது அலையை தீர்மானிக்கும் காரணியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.