டில்லி

வாக்கு இயந்திரத்தில் தில்லு முல்லு நடப்பதால் வரவுள்ள கர்னாடகா மாநில தேர்தலை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

வாக்களிப்பு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடத்தி பாஜக தேர்தலில் வெற்றி பெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.  இது குறித்து காங்கிரஸ் மட்டுமின்றி அனைத்து எதிர்க்கட்சிகளும் சமீபத்தில் நடந்த உத்திரப் பிரதேச உள்ளாட்சித் தேர்தலை சுட்டிக் காட்டுகின்றன.   வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்திய இடங்களில் பாஜகவுக்கு கிடைத்த அளவு வாக்குகள் வாக்குச் சீட்டு பயன்படுத்திய இடஙகளில் கிடைக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றன.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத் தேர்தல் அடுத்த வருடம் நடக்க உள்ளது.  வாக்கு இயந்திரம் உபயோகப் படுத்துவதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அந்த தேர்தலை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாக செய்தி ஒன்று தெரிவிக்கிறது.   அந்த செய்தியில் இந்த தேர்தல் புறக்கணிப்புக்கு ஆம் ஆத்மி கட்சி யின் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி, திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் மம்தா பானர்ஜி,  லாலு பிரசாத் யாதவ் மற்றும் சீதாராம் எச்சூரி ஆகியோர் ஆதரவு அளித்துள்ளதாக கூறுகிறது.  கர்நாடகாவை தற்போது ஆண்டு வரும் காங்கிரஸ் இந்த விவகாரத்தில் மவுனம் சாதித்து வருகிறது.

இது குறித்து, “வாக்கு இயந்திரம் பயன்படுத்துவதை நிறுத்தி பழைய முறைப்படி வாக்கு சீட்டு முறை கொண்டு வரப்பட்டால் பாஜக வாக்கு இயந்திரத்தில் குழறுபடி செய்வது நிறுத்தப்படும்.  இந்நாள் வரை உங்கள் வாக்கு திருடப்பட்டது, இனி உங்கள் விருப்படி வாக்களிக்க முடியும் என பிரசாரம் செய்ய முடியும்.  அனைத்து எதிர்க்கட்சிகளும் தேர்தல் புறக்கணிப்புக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் தேர்தல் ஆணையம் வாக்கு இயந்திர முறையை மாற்றியே ஆக வேண்டும்.  இது எதிர்க்கட்சிகளின் பிரம்மாஸ்திரம்.   அதே நேரத்தில் ஏதாவது ஒரு எதிர்க்கட்சி பின் வாங்கினாலும் இது நடைபெறாது” என எதிர்க்கட்சிகள் கூடிப் பேசியதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

”ஆனால் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை இந்த புறக்கணிப்பில் அது கலந்துக் கொள்வது சந்தேகமே.  ஏனென்றால் தற்போதுள்ள நிலையில் பாஜக வுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு உள்ளது.  அதை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ள நினைக்கின்றனர்.   தேர்தல் புறக்கணிப்பு தேவையற்றது என அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் கருதுகிறார்.   ஏற்கனவே நிதிஷ் குமார் காங்கிரஸ் கட்சியை காலை வாரி விட்டதில் இருந்து கட்சியின் தலைமை மற்ற கட்சிகளுடன் கூட்டு வைக்க பெரிதும் தயக்கத்தில் உள்ளது.  நாம் வாக்களிப்பு இயந்திரத்தைக் கூட நம்பி விடலாம்,  ஆனால் இந்த தலைவர்களை நம்பவே கூடாது என ஒரு காங்கிரஸ் தலைவர் கூறி உள்ளார்.” என அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.