டில்லி

ந்திய அரசு ஆபரேஷன் அஜய் மூலம் இஸ்ரேலிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணியைத் தொடங்கி உள்ளது.

கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி எல்லை பகுதியில் புகுந்து அந்த பகுதியில் இருந்த மக்களைத் தாக்கியது. இதனால் பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை  செய்யப்பட்டனர். இதற்கு, இஸ்ரேல் பாதுகாப்புப் படை பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பிரதமர் மோடியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு போர் நிலவரம் குறித்து கூறியுள்ளார்.

தற்போது இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் 18,000  இந்தியர்களை மீட்க மத்திய அரசும், வெளியுறவுத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன்படி “ஆபரேஷன் அஜய்” மூலம் இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளை இந்தியா தொடங்கியுள்ளது.

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் தளத்தில்,

“இஸ்ரேலில் இருந்து இந்தியர்கள் நாடு திரும்புவதற்கு வசதியாக ஆபரேஷன் அஜய் தொடங்கப்படுகிறது. அவர்களுக்காக சிறப்பு விமானங்கள் மற்றும் பிற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. வெளிநாட்டில் உள்ள எங்கள் நாட்டினரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்.” 

என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் இருந்து இந்தியா செல்வதற்காகப் பதிவு செய்துள்ள இந்தியர்கள், நாளை முதல் சிறப்பு விமானத்தில் இந்தியாவுக்கு அனுப்பப்பட உள்ளனர் என்று இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.