லூடன்

ங்கிலாந்து சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் விமானச் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

இங்கிலாந்து நாட்டின் பெட்போர்ட்ஷையர் மாகாணத்தின் முக்கிய நகராக லூடன் விளங்குகிறது. லண்டனில் இருந்து 45 கி.மீ வடக்கே அமைந்துள்ள இங்கு சர்வதேச விமானநிலையம் இயங்குகிறது.  இங்கு வழக்கம்போல நேற்றிரவு விமானச்சேவை மும்முரமாக நடந்து கொண்டிருந்தபோது அங்குள்ள கார் நிறுத்தும் கட்டிடத்தின் 3-வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அங்கிருந்த கார்கள் தீப்பிடித்து எரிய தொடங்கின.

கட்டிடம் முழுவதும் சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்து மேலும் தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்ததால் பயங்கர புகை மண்டலம் சூழ்ந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் காவல்துறை உதவியுடன் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ரசாயனம் தெளித்தும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு கட்டுப்படுத்தினர்.

விபத்தில் 1500-க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் கருகி முற்றிலும் சேதமடைந்தன. பலமாடி வாகன நிறுத்துமிட கட்டிடம் தீக்கிரையானது. தீயணைப்பு வீரர்கள் விமான நிலையத்திற்குள் தீ பரவுவதைத் தடுக்கும் வகையில் சாதுரியமாகச் செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  இந்த பணியின்போது புகைமூட்டத்தில் சிக்கியதில் மூச்சுத்திணறி 6 தீயணைப்பு வீரர்கள் மயங்கி விழுந்தனர்.

தீ விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை எனவும் இதுகுறித்து விசாரணை நடத்த உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்து காரணமாக விமான நிலையத்துக்குள் பொதுமக்கள் நுழையத் தற்காலிக தடை விதிக்கப்பட்டது.  தீ விபத்து காரணமாக லூடன் விமான நிலைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதனால் லூடன் விமானநிலையத்திற்கு வரவிருக்கும் விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டது.

மேலும் லூடன் நகரில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், ரயில் நிலையங்கள் ஆகியவை நிரம்பி வழிவதால் வெளிநாட்டுப் பயணிகள் கடும் அவதியடைந்தனர். நிலைமை தற்போது சீரழிந்துள்ளதால் மீண்டும் விமானநிலையம் திறக்கப்பட உள்ளது