சென்னை

வாக்காளர் பட்டியலில் உயிரோடு இருப்போர் பெயர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்கள் இடம் பெறுவது வழக்கமான ஒன்றாகி விட்டது.   அவ்வாறு உள்ள பெயர்களில் கள்ள வாக்கு பதிவும் சகஜமாக உள்ளது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சைலப்பா கல்யாண் என்பவர் பொதுநல வழக்கு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “ஒரே நபரின் பெயர் பலமுறை வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது  மேலும் இறந்தவர்கள் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இவற்றை நீக்கி புது வக்காளர் பட்டியலை வெளியிட இந்திய தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை எழுப்பப்பட்டிருந்தது.

தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதிஉ செந்தில்குமார் ராமமூர்த்தி தலைமையிலான அமர்வில் இந்த மனு விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரர், “இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் ஏராளமாக உள்ளது.  ஆகவே இறப்பு சான்றிதழுடன் இறந்தவர் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இதனால் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் உள்ளோர் நிலையை அறிந்து கொள்ளலாம்” என வாதிட்டார்.

உயர்நீதிமன்ற அமர்வு, “இந்த மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலித்து, சிறந்த வாக்காளர் பட்டியலை தயாரிப்பது குறித்து நாடாளுமன்றம் அல்லது இந்திய தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும். குறிப்பாக இந்திய தேர்தல் ஆணையம், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்.

எனவே வாக்காளர் பட்டியலில் உயிரோடு இருப்பவர்கள் மற்றும் வாக்களிக்க தகுதியான நபர்களின் பெயர்கள் மட்டுமே இருப்பதை உறுதி செய்யவேண்டும்.  இதைத் தவிர மற்றவர்களின் பெயர் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதுகுறித்து எந்த வகையில் நடவடிக்கை எடுத்து வாக்காளர் பட்டியலை தயாரிப்பது என்பதை இந்திய தேர்தல் ஆணையமே முடிவு செய்துகொள்ள வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்.’ ” என தெரிவித்துள்ளது.