சென்னை:
சென்னையில் அனுமதி இல்லாமல் இயங்கும் பெண்கள் விடுதிகளை பதிவு செய்ய ஜனவரி 20ம் தேதி வரை கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்தது. நாளை கடைசி நாளாக இருக்கும் நிலையில், இதுவரை 25 சதவிகித விடுதிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வேலைக்கு செல்லும் இளம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் விடுதிகள் தமிழகத்தில் புற்றீசல் போல முளைத்து வருகின்றன. இதன் காரணமாக பல்வேறு முறைகேடுகள், பாலியல் தொல்லை கள் நடைபெற்று வருவதாக புகார்கள் வந்துள்ளன. பலர் இதுபோன்ற விடுதிகளை தொழிலாகவே நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, சென்னையில் செயல்பட்டு வரும் விடுதிகள் குறித்து உடனே அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்றும், அதுகுறித்து இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும், விடுதி நடத்துப வர்கள் அரசின் சமூக நலத்துறையின் அனுமதி பெற வேண்டும் என்று புதிய வழி காட்டு நெறி முறைகளை தமிழக அரசு அறிவித்தது.
இதற்கான கால அவகாசம் டிசம்பர் 31ந்தேதி வரை கொடுக்கப்பட்ட நிலையில், மேலும் 20 நாட்கள் அதிகரித்து ஜனவரி 20ந்தேதிக்குள் அனைத்து விடுதிகளும் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் சுமார் 25 சதவிகித விடுதிகள் மட்டுமே அரசின் இணையதளத்தில் பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 2000 விடுதிகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ள நிலையில், 524 விடுதிகள் மட்டுமே தங்களை பதிவு செய்துள்ளது.
இதுவரை பதிவு செய்யாத விடுதி நிர்வாகிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகஅரசு எச்சரித்து உள்ளது.