சென்னை:

ண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வந்த மறுமதிப்பெண் முறைகேடு வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய உள்ளிருப்பு போராட்டம், பல்கலைக்கழக பதிவாளர் கொடுத்த உறுதிமொழியை தொடர்ந்து வாபஸ் பெற்றனர்.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் நடைபெற்று வரும் செமஸ்டர் தேர்வில் தோல்வி அடைபவர்கள் மறுமதிப்பீடு செய்யும்போது முறைகேடுகள் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

அதைத்தொடர்ந்து, ஏற்கனவே நடைபெற்று வந்த, குறிப்பிட்ட பாடத்தில்  தேர்ச்சி அடையாதவர்கள் அடுத்த செமஸ்டரில் தேர்வினை எழுதலாம் என இருந்த நடைமுறை மாற்றப்பட்டு, கிரெடிட் முறை அமல்படுத்தப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாபல்கலைக்கலையில் மாணவர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். புதிய முறையில்,  மாணவ, மாணவிகளின் தேர்ச்சி வீதம் குறைகிறது எனவும், விடைத்தாள் திருத்தம் செய்யும் முறை கடுமையாக்கப்பட்டிருப்பதால் தேர்ச்சி பெறுவது கடினமாக இருப்பதாகவும், தங்களது ஓராண்டு காலம் வீணாகிறது என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த புதிய முறையை ரத்து செய்ய வலியுறுத்தி   அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்  திரண்ட மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட  மாணவர்களிடம் பல்கலைக்கழக பதிவாளர் குமார்  பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மாணவர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக மனுவை பெற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்வு விதிகளில் செய்யப்பட்ட மாற்றம் தொடர்பாக விளக்கம் அளித்தார்.

‘அரியர் தேர்வு விதிகளில் செய்த மாற்றத்தை மாணவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. பல்கலைக்கழக இணைய தளத்தில் இதனை தெரிந்துகொள்ளலாம். தனி குழு அமைத்து மாணவர்க ளின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்’ என்றும் அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மாணவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.