திருவனந்தபுரம்: கேரள சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், ஆளுநர்  ஆரிப் முகமது கான் இரண்டே நிமிடத்தில் தனது உரையை நிறைவு செய்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசுக்கும் கேரள கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. கேரள மாநில அரசை பொதுவெளியில் ஆரிப் முகமது கான் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் மாநில சட்டமன்றத்தில்  நிறைவேற்றப்படம் தீர்மானங்கள், சட்ட மசோதாக்களுக்கு அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வருகிறார். மாநில அரசின் மசோதாக்கள் மற்றும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்க கோரி கவர்னருக்கு எதிராக கேரளா அரசும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளருது.

இந்த நிலையில்,   இன்று  இந்தாண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் திருவனந்தபுரத்தில் உள்ள சட்டசபை கட்டிடத்தில் தொடங்கியது. இன்றைய கூட்டம்  முதல் கூட்டம் என்பதால் மரபுபடி  கவர்னர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவைக்கு வந்த கவனர்ரை முதல்வர் பினராயி விஜயன் பூங்கொத்து கொடுத்து  வரவேற்றார். அதைத்தொடர்ந்து ஆளுநர் தனது இருக்கைக்கு வந்து தனது உரையை வாசிக்கத் தொடங்கினார்.

அப்போது, அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து தனது உரையை துவங்கினார். 62 பக்கம் கொண்ட கொள்கை உரையின் 136 பத்திகளில், நேரடியாக கடைசி பக்கத்தை திருப்பிய கவர்னர், ”இப்போது கடைசி பத்தியை படிக்கிறேன்” எனக் கூறி அதை மட்டும் வாசித்துவிட்டு உரையை முடித்து அமர்ந்தார். அதன்பிறகு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது; அது முடிந்ததும், கவர்னர் சட்டசபையை விட்டு வெளியேறினார்.

இந்த முழு காட்சிகளும் 5 நிமிடங்களுக்குள் நடந்தது. அதிலும் சரியாக 9:02 மணிக்கு உரையை துவக்கிய கவர்னர் ஆரிப் முகமது கான், 9:04க்கு உரையை முடித்தார். வெறும் இரண்டே நிமிடத்தில் கவர்னர் உரையை முடித்ததால் சட்டசபையில் பரபரப்பான சூழல் நிலவியது.