டெல்லி: ராமர் பாதையில் நாம் சென்றால் இந்தியா நம்பர்-1 நாடாக மாறுவதை யாரும் தடுக்க முடியாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா 2024ம் ஆண்டு ஜனவரி 22ந்தேதி  திங்கட்கிழமையன்று கோலாகலமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோதி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட மூத்த பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் இந்த வரலாற்று சிறப்பு மிக்க விழாவில் பங்கேற்றனர். மேலும் முக்கிய பிரமுகர்கள் 10ஆயிரம் பேர் கலந்துகொண்ட நிலையில், 23ந்தேதி முதல் பொதுமக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த பிரமாண்டமான வரலாற்று சிறப்பு மிக்க விழாவை  காங்கிரஸ், திமுக உள்பட  ‘இண்டி’ கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் சில புறக்கணித்தன. இருந்தாலும் முழுமையாக புறக்கணிப்பதாக சொல்ல முடியாமல்,  ஆன்மீகம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக அறிவித்தன.

மேலும், இண்டி கூட்டணியில் உள்ள  அரவிந்த் கெஜ்ரிவாலின், ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஊர்வலம் நடத்தியிருக்கிறது. டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி ராமர் பூஜையை மேற்கொண்டார்.

இதை  அரசியல் நிகழ்வாக பா.ஜ.க. மாற்றியதாக குற்றம்சாட்டியிருக்கும் திரிணாமுல் காங்கிரஸ், எல்லா மதத்தினரையும் இணைத்து நல்லெண்ண பேரணியை நடத்த தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

அதுபோல சிவசேனா தலைவர்  உத்தவ் தாக்கரே மாலை 6 மணிக்கு காலாராம் கோவிலில் பூஜையும், இரவு 7 மணிக்கு கோதாவரி நதிக்கரையில் மகா ஆரத்தியும் நடத்தினார்.

உ.பி.யைச்சேர்ந்த சமாஜ்வாதி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ், பிரான் பிரதிஷ்டா நிகழ்ச்சி முடிந்ததும், ராமரை தரிசிக்க குடும்பத்துடன் அயோத்திக்கு செல்லப் போவதாக கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதலமைச்சர்   அரவிந்த் கெஜ்ரிவால், அயோத்தி ராமர் கோயிலில் கடந்த ஜன.,22ம் தேதி நடந்த பிராண பிரதிஷ்டை நிகழ்வானது, உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ராமர் ஜாதி, மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டியதில்லை. ஆனால் இன்று நம் சமூகம் அந்த அடிப்படையில் பிளவுபட்டுள்ளது. அனைவருக்கும் நல்ல கல்வி, ஆரோக்கியம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி ‘ராமராஜ்ஜியம்’ உத்வேகத்துடன் டில்லி அரசு செயல்பட்டு வருகிறது.

ஆம்ஆத்மி அரசு சார்பில், மாநிலத்தில் உள்ள முதியோர்கள் 12 புனித யாத்திரை தலங்களுக்கு இலவசமாக அழைத்து செல்லப்படுகின்றனர். இதுவரை 83,000 பேர் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

அயோத்திக்கு செல்ல வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். முடிந்தவரை அவர்களை அயோத்திக்கு அழைத்துச் செல்ல முயற்சிப்போம். டில்லியில் இருந்து அயோத்திக்கு செல்லும் பக்தர்களின் பயணத்திற்கு நிதியுதவி வழங்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தை உதவிகளையும் செய்வோம்.

மிகுந்த நேர்மையுடன், மக்களின் நலனுக்காக நம்மை அர்ப்பணிக்க வேண்டும். ராமரின் பாதையில் நமது தேசம் சென்றால், இந்தியா உலகின் நம்பர் 1 நாடாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.

இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.