சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் பலர் தற்கொலை செய்து வரும் நிலையில், அதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு சிபிசிஐடி காவல்துறைக்கு மேலும் அவகாசம் வழங்கி உள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி பணத்தை இழந்து இதுவரை 40க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு தடை சட்டம் இயற்றி கவர்னர் அனுமதிக்கு அனுப்பிய நிலையில், கவர்னர் அனுமதி வழங்க மறுத்து திருப்பி அனுப்பி உள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழப்பு ஏற்பட்டதால், சென்னை பெருங்குடியில் வசித்துவந்த லண்டனை சேர்ந்த தனியார் வங்கியின் ஊழியரான மணிகண்டன் என்பவர் தனது மனைவி தாரகபிரியா, 11 வயது மகன் தாரன், ஒன்றரை வயது தாகன் ஆகியோரை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார்.

இதேபோல, சென்னை அண்ணா நகரை சேர்ந்த ரகுவரனும் தற்கொலை செய்து கொண்டார். இந்த இரு வழக்குகளையும் சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், மும்பையை சேர்ந்த கேம்ஸ் 24×7 என்கிற நிறுவனத்துக்கு விளையாட்டு தொடர்பான விவரங்கள், இறந்துபோனவர்களுக்கு விளையாட்டு மூலம் வழங்கப்பட்ட போனஸ், சம்பாதித்த தொகை, வருமான வரி பிடித்தம் தொடர்பான விவரங்களை வழங்கும் படி சிபிசிஐடி கடந்த மாதம் 24ம் தேதி உத்தரவிட்டது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில் மேலும் அவகாசம் கோரப்பட்ட நிலையில்,  பதில் மனு தாக்கல் செய்வதற்கு அவகாசம் வழங்குவதில் ஆட்சேபம் இல்லை என்று தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அதுவரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவது போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்க கூடாது என்று சிபிசிஐடிக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.

இதையடுத்து அரசு தரப்பு பதிலளிக்க மார்ச் 28ம் தேதி வரை அவகாசம் வழங்கிய நீதிபதி, அதுவரை எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.