சென்னை: தமிழகத்தில் சட்டவிரோதமாக குவாரிகளில் மணல் அள்ளுவதை தடுக்க தொடர் கண்காணிப்பு செய்யப்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

‘தமிழ்நாட்டின் பல இடங்களில் சட்டவிரோத மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறுகிறது. ஆனாலும், தொடர்ந்து மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பான வழக்கில், சட்ட விரோத மணல் கடத்தலில்  ஈடுபடுவோருக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க தவறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என  நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், வேலூரில் உள்ள பெருமுகை ஊராட்சி அரும்பருத்தி பகுதியில் பாலாற்றில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதாக கூறி வேலூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஒரு மீட்டர் ஆழத்தை விட அதிகமாக மணல் எடுப்பதால்  நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க குழு ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர். சண்முகசுந்தரம் ஆஜராகி, மணல் குவாரிகளில் மணல் அள்ள பல்வேறு நிபந்தனைகள் விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை கண்டிப்புடன் பின்பற்றப்பட்டு வருகிறது. குவாரிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க தொடர்ந்து கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கையும், மணல் அள்ள நிபந்தனைகள் விதிக்கும் அரசாணையையும் தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் 20ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.