சென்னை: தமிழகஅரசின் பசுமை பண்ணை விலை கடைகளில் பெரிய வெங்காயம்  கிலோ ரூ.45க்கு விற்பனையை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கிலோ ரூ.100க்கு மேல் விற்பனையாவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து, அரசே வெங்காயம் கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று அறிவித்தார்.

இதையடுத்து,  பெரிய வெங்காயம் விற்பனையை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார் .சென்னை தேனாம்பேட்டை கடையில் ரூ.45க்கு பெரிய வெங்காயம் விற்பனையை அவர் தொடங்கி வைத்து பயனர்களுக்கு வழங்கினார். இதையடுத்து, முதல்கட்டமாக சென்னையில் பல இடங்களில் உள்ள பசுமை பண்ணை கடைகளில் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தேவையான காய்கறிகளை விற்பனை செய்யும் மார்க்கெட்டாக கோயம்பேடு மார்க்கெட் திகழ்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் லாரி, லாரியாக காய்கறிகள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில், மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய  150 டன் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.