சென்னை:
திமுகவின் ஓராண்டு ஆட்சி மக்களுக்கு பயன்தராத ஆட்சி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சி பொறுப்புக்கு வந்தது. கடந்த ஆண்டு மே 7ஆம் தேதி தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றார். அதன்படி இன்றுடன் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு ஆகிறது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், ‘மக்களுக்கு பயன் தராத துன்பங்கள் நிறைந்த துயரமான ஆட்சி திமுகவின் ஓராண்டு ஆட்சி என்பதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள்’ என குறிப்பிட்டுள்ளார். மேலும், தேர்தலின் போது, திமுக கொடுத்த பொய்யான, போலியான, நிறைவேற்ற முடியாத, சாத்தியமற்ற வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்ததன் விளைவாக தமிழ்நாட்டில் திமுக ஆட்சி துரதிர்ஷ்டவசமாக அமைந்துவிட்டதாக தெரிவித்துள்ள அவர், மக்கள் இன்பங்களை மறந்து துன்பங்களை மட்டுமே அனுபவித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், ‘திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்து, மேடைக்கு மேடை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், திமுக ஆட்சி அமைந்து ஒராண்டாகியும் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை’ என அவர் விமர்சனம் செய்துள்ளார்.