ல்லாருக்கும் ரவுண்ட்ஸ்பாயோட வணக்கமுங்க..

இன்னிக்கு சாயந்திரம் கமல் திருச்சியில நடத்தப்போற, “மக்கள் நீதி மய்ய” முதல் மாநாடு பத்தித்தான் சமூகவலைதளங்கள்ல பேச்சு. அதாவது  பதிவுகள்.

இதுக்காக நேத்து வைகை விரைவு தொடர் வண்டியில மக்களோடு மக்களா முதல் வகுப்பு குளிர்சாதன வசதி பெட்டியில பயணிச்சிருக்காரு கமல்.

கமலோட இப்போதைய அரசியல் கெட் அப்

சந்தோசம்.

அதுக்கு முன்னாடி, “இந்தத் தொடர்வண்டி நிக்கிற இடங்களில் எல்லாம் மக்களை சந்தித்து பேசுவேன்”னு அறிவிச்சாரு கமலு. இதுக்கு பத்திரிகையாளரு சாவித்திரி கண்ணன் உட்பட சில பேரு எதிர்ப்பு தெரிவிச்சு, தென்னக ரயில்வே மேலாளர்கிட்ட மனு கொடுத்தாங்க.

“குணா” கெட் அப்

அதுல, “கமல் அப்படிங்கிற தனி நபர் ரயில்ல பயணிக்கிறது பிரச்சினை இல்லை. ஆனா நடிகரா, அரசியல்தலைவரா பயணிச்சி வழியில தொடர் வண்டி நிக்கிற இடத்திலெல்லாம்  மக்களை சந்திப்பேன்னு அறிவிக்கிறது சரியில்லே. இது மாதிரி செஞ்சா அங்கங்கே கூட்டம் கூடும். நெரிசல் ஏற்படும். பொது மக்களுக்கு.. அதாவது பயணிகளுக்கு ஆபத்து ஏற்படலாம். ஏற்கெனவே வட இந்திய நடிகர் ஒருத்தரு இது மாதிரி தொடர் வண்டி பிரச்சாரம் பண்ணப்ப இரண்டு பேரு செத்திருக்காங்க”னு குறிப்பிட்டிருந்தாங்க.

இதனால, கமல் தன்னோட தொடர்வண்டி பிரச்சாரத்தை ரத்து செஞ்சுட்டு, சாதாரணமா ( முதல் வகுப்பு ஏ.சி. பெட்டியில ) பயணம் செஞ்சி திருச்சி போயி சேர்ந்துட்டார்.

“அவ்வை சண்முகி”

இது பத்தி, “நான் மக்களை சந்திக்கிறதுகூட அரசியலாக்கப்படுது”ன்னு ஆதங்கமா சொல்லியருக்காரு.

இது பத்தி பத்திரிகையாளரு சாவித்திரி கண்ணன், “கமலுக்கு மக்கள் பிரச்சினைகள் பத்தி தெரியல. அவரு ரயில்ல பயணம் செஞ்சிருந்தா தெரிஞ்சிருக்கும். முறையான வழிகள்ல அவரு மக்களுக்கு இடையூறு இல்லாம மக்கள சந்திக்கட்டும்”னு சொல்லியிருக்காரு.

இதுக்கு ஒரு உதாரணமும் சொல்லியிருக்காரு.

அப்பு

அதாவது, “கமல் குள்ளரா நடிச்ச அபூர்வ சகோதரர்கள் படத்தோட வெற்றி விழா, அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையில வள்ளுவர் கோட்டத்துல நடந்துச்சு. உள்ளே குள்ள அப்பு உருவத்துல வந்து முதல்வர்கிட்ட உற்சாகமா விருது வாங்கினாரு கமலு. ஆனா வெளியில ரசிகர்கள் தள்ளுமுல்லு நடந்து, காவல்துறையினர் தடியடி நடத்துற அளவுக்க போச்சு. ஆனா இதெல்லாம் இரண்டு நாளுக்கு அப்புறம் அவரை சந்திச்சு நான் சொல்றப்பத்தான் கமலுக்கு தெரிஞ்சுச்சு”ன்னு சாவித்திரி கண்ணன் சொல்றாரு.

அதோட, “இப்படி அரங்கத்துக்கு வெளியில நடந்ததே,  உள்ள இருந்த கமலுக்கு நான் சொல்லி.. அதுவும் ரெண்டு நாள் கழிச்சுத்தான் தெரிஞ்சுது. அதே மாதிரித்தான் இவரோட ரயில் பயணம் ஆரவாரமா நடந்தா மக்களுக்கு என்னென்ன பிரச்சினை இருக்கும்னு அவருக்கு புரியலே”னு சொல்றாரு.

மைக்கல் மதன காம ராஜன்

உண்மைதான். இதுக்கு முன்னால 13 வருசத்துக்கு முன்னால ஒரு முறை ரயில்ல போயிருக்காரு கமலு. அதுவும் “மும்பை எக்ஸ்பிரஸ்” படப்பிடிப்பு.

ஆக எளிய மக்களோட நிலைமை கமலுக்குத் தெரியல. ஏன்னா அவரு வாழ்ந்த, வாழற வாழ்க்கை அப்படி. இப்பக்கூட பாருங்க இரண்டாம் வகுப்புல திருச்சிக்கு பயணிக்கலை.. முதல் வகுப்பு ஏ.சியிலதான் “மக்களோடு மக்களா” பயணிச்சிருக்காரு.

இப்படி எகுடு தகுடா இவருக்கு ஆலோசனை கொடுக்கறவங்க யாருன்னு தெரியலே. கூட இருக்கிறவங்ககிட்ட கமல் எச்சரிக்கையா இருக்கணும்.

தன்னோட கட்சி பெயர், சின்னத்தை அறிவிச்ச மதுரை மாநாட்டுல, “எங்க கட்சியை பதிவு பண்ணிட்டோம்”னு கமல் அறிவிச்சாரு. ஆனா தேர்தல் ஆணையத்தில விசாரிச்சா, “மனு கொடுத்திருக்காங்க… அதை பரிசீலனைக்கு எடுக்கவே மூணு மாசம் ஆவும்”னு சொன்னாங்க.

பாரதி ( நெட்டிசன்கள் கைவண்ணம்)

அதனாலதான் சொல்றேன் கூட இருக்கிற ஆளுங்ககிட்ட கமல் எச்சரிக்கையா இருக்கணும்.

அதோட, மக்கள் பிரச்சினைகளை தெரிஞ்சிக்கணும். ஏற்கெனவே, “நான் படிக்காதவன். அதனால நீட் பத்தித் தெரியாது”ன்னு சொன்னவர்தான் கமல்.

நீட் பத்தி தெரிஞ்சு பேசறவங்க எல்லாரும் அந்த தேர்வு எழுதறவங்க இல்லே. நடிகரு சூர்யா கூட ஒரு தமிழ் நாளேட்டுல நீட் பத்தி அத்தனை தெளிவா எழுதியிருந்தாரு. கமலு அதையாவது படிச்சிருக்கலாம். இல்லேன்னா தெரிஞ்ச ஆளுங்களை கூட வச்சிருக்கலாம்.

இதை எல்லாத்தையும் விட மக்கள் மனச அறிஞ்சுக்க அருமையான ஒரு வழி இருக்கு.

அது மூலமா மக்கள் மனநிலையை படம் புடிச்ச மாதிரி தெரிஞ்சுக்கலாம். அவங்க உணர்வுகளைப் புரிஞ்சிகிட்டு நல்லா பேசலாம், செயல்படலாம்.

அதுவும் கரும்பு திங்க கூலி மாதிரி, கமலுக்கு புடிச்ச விசயம்தான்.

அதாவது (மாறு) வேசம் போடுறதுன்னா கமலுக்கு ரொம்பவே புடிக்கும்ங்கிறது எல்லாருக்கும் தெரியும்.

இது எதுலேன்னு எனக்கே தெரியலே

சமீபத்துல வந்த விஸ்வரூபம் படத்திலேயே பார்த்தீங்கன்னா ஐயரு வேசத்துல ஐயரு மாதிரியே இருப்பாரு, இஸ்லாமியர் வேசத்துல இஸ்லாமியர் மாதிரியே இருப்பாரு. ஏன், “மைக்கேல் மதன காமராஜன்” படத்துல வேற வேற கெட்டப்புல (நாலு வேசம்!) வந்து அசரடிச்சாரே..

குணா படத்துல வந்தப்போ அது கமல்தான்னே தெரியலையே… அவ்வை சண்முகியும் அப்படித்தான்.

ஏன்.. அபூர்வசகோதரர்கள்ல குள்ளரா வந்து அதிர்ச்சி அளிச்சாரே..!

அது மாதிரி வேற கெட்அப்ல.. அதாவது மாறு வேசத்துல தமிழ்நாடு முழுக்க ஒரு ரவுண்டு கமல் வரணும்.

அந்தக்காலத்துல அரசருங்க எல்லாம் இப்படித்தான் மாறு வேசத்துல வந்து மக்களை நாடி புடிச்சிப் பார்ப்பாங்களாமே..

அது மாதிரி மாறு வேசத்துல மக்களோட நெருங்கிப் பழகி, அவங்க மனசை கமல் புரிஞ்சுக்கலாம். அதுக்கேத்த மாதிரி பேசி மக்களை கவரலாம்.

அப்புறம் அவருதான் தமிழ்நாட்டு முதல்வரு!

என்ன, நாஞ் சொல்றது?