கனிமொழி – முத்துக்கருப்பன்

 

சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போவதாக இரண்டு நாட்களாக  பரபரப்பை ஏற்படுத்தி அவந்தார் அ.தி.மு.க. உறுப்பினர் முத்துகருப்பன்.

இன்று கூட, “எனது ராஜினாமா கடிதம் தாயாராக இருக்கிறது” என்று ஊடகத்தினரிடம் காண்பித்தார். பிறகு, “எனது ராஜினாமா கடிதத்தை வெங்கையநாயுடுவிடம் அளிக்கப்போகிறேன்” என்றார்.

அதோடு, “தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்னிடம் பேசி மனதை மாற்றிவிடுவார் என்பதால் எனது செல்போனை அணைத்துவைத்துவிட்டேன்” என்றார்.

இதற்கிடையே அவர் தனது ராஜினாமா கடிதத்தை வெங்கையா நாயுடுவிடம் அளித்ததாகவும், அவர் ஏற்க மறுத்ததாகவும் ஒரு தகவல் உலா வந்தது.

பிறகு அது தவறான தகவல் என்றும் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட “தகவல்” என்றும் தெரியவந்தது.

உண்மையில், தனது ராஜினாமா கடிதத்தை வெங்கையாநாயுடுவிடம் அவர் அளிக்கவே இல்லை என்பது தெரியவந்தது.

இது குறித்து கேட்டபோது, “முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்னைத் தொடர்புகொண்டு ராஜினாமா செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். ஆகவே நான் ராஜினாமா முடிவை மாற்றிக்கொண்டேன்” என்றார்.

“எடப்பாடி உங்கள் மனதை மாற்றிவிடக்கூடாது என்பதற்காக செல்போனை அணைத்துவைத்துவிட்டதாக கூறினீர்களே.. இப்போது முரண்பட்டு பேசுகிறீர்களே..” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “முரண்பாடெல்லாம் ஏதுமில்லை..” என்று திக்கித்திணறி சமாளிக்கிறார்.

ஆக, இவரது ராஜினாமா நாடகம் வெட்டவெளிச்சமாகி சந்தி சிரிக்கிறது.

இதே போன்ற ஒரு ராஜினாமா நாடகம் கடந்த 2008ம் ஆண்டு நடந்தது.

அப்போது அதை நடத்தியவர், தி.மு.க. எம்.பி.யான கனிமொழி.

இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி திமுக ராஜ்யசபா எம்பி பதவியை  ராஜினாமா செய்வதாக அறிவித்து பரபரப்பை கிளப்பினார் கனிமொழி.

ஒட்டுமொத்த தேசமும், கனிமொழி பக்கம் திரும்பியது.

“ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டேன்” என்றார் கனிமொழி.

எல்லோரும், “குடியரசு துணைத்தலைவரிடம் அளித்துவிட்டார் போலும்” என்று நினைத்துக்கொண்டிருக்க… “நான் எனது கட்சித் தலைவர் (அப்பா) கருணாநிதியிடம் ராஜினாமா  கடிதத்தை அளித்துவிட்டேன்” என்றார்.

கேட்டவர்கள் சிரிப்பாய் சிரித்தார்கள்.

பதவி படுத்தும்பாடு!