சென்னை,

ஒருதலைக்காதல் காரணமாக,  தனது காதலை ஏற்றுக்கொள்ளாத இளம்பெண்ணை,  இளைஞர் ஒருவர் எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆதம்பாக்கம் ஏஜிஎஸ் காலணியைச் சேர்ந்தவர் இந்துஜா. இளம்பெண்ணான அவரை, கடந்த சில மாதங்களாக அவருடன் பள்ளியில் சேர்ந்து படித்து வந்த  இளைஞர் ஆகாஷ் காதலித்து வந்துளளார்.

தனது காதலை ஏற்க இந்துஜாவை வற்புறுத்திய ஆகாஷ், அவர் ஏற்க மறுத்தும்  ஒரு தலையாகவே காதலித்து வந்துள்ளார்.

மீண்டும் மீண்டும் தன்னை காதலிக்க வற்புறுத்திய ஆகாஷின் தொல்லை காரணமாக, தனது வேலையை உதறிய இந்துஜா, வீட்டிலேயே முடங்கி உள்ளார்.

இதனால் வெறுப்புற்ற ஆகாஷ், இந்துஜாவை பழிவாங்க எண்ணி கையில் பெட்ரோல் பாட்டிலுடன்  நேற்று மாலை அவர் வீட்டுக்கு வந்துள்ளார்.

வீட்டில் அப்போது,  இந்துஜா, அவரது தாய் ரேணுகா, தங்கை நிவேதிதா, தம்பி ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர்.

வீட்டுக்குள் வந்த  ஆகாஷ், இந்துஜாவிடம் மீண்டும்  தன்னை காதலிக்குமாறு மீண்டும் வற்புறுத்தியுள்ளார்.

இதன் காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை இந்துஜா மீது ஊற்றி தீவைத்துவிட்டு ஆகாஷ் தப்பியோடிவிட்டார்.

இதனால் பதற்றம் அடைந்த அவரது தாயார் மற்றும் தங்கை ஆகியோர் இந்துஜாவை காப்பாற்ற முயன்றுள்ளனர். இதன் காரணமாக அவர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவர்களை  சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இந்துஜா பரிதாபமாக உயிரிழந்தார். இந்துஜாவின் தாய்க்கும் தங்கைக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தீ வைத்துவிட்டு தப்பியோடிய ஆகாஷை வலைவீசி தேடி  கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஒருதலைக்காதல் காரணமாக இளம்பெண் மீது தீ வைத்து எரித்துகொன்ற கொடூரம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.