மும்பை:

ரெயில் நிலையங்களில் ‘ஒரு ரூபாய் கிளினிக்’ அமைக்க  ரெயில்வே முடிவு செய்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் 10 ரெயில்வே ஸ்டேஷன்களில் கிளினிக் அமைக்கப்படும் என்று மேற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

ரெயில் பயணிகளுக்கு உதவும் வகையில்,  ரெயில் நிலையங்களில் குறைந்த கட்டணத்தில் பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ‘ஒரு ரூபாய் கிளினிக்’ அமைக்க இந்திய ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ரெயிலில் பயணம் செய்பவர்களுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்படும் பட்சத்தில் பயணிகள் நலன் கருதி, விரைவில் நாடு முழுவதும் உள்ள முக்கியமான  ரெயில் நிலையங்களில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் வகையில் ஒரு ரூபாய் கிளினிக் தொடங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

முதல்கட்டமாக மேற்கு ரயில்வே நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 10 ரயில் நிலையங்களில் இம்மாத இறுதிக்குள் இந்த கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றுக்கு ‘ஒரு ரூபாய் கிளினிக்’ என பெயரிடப்பட்டுள்ளது. அதாவது, டாக்டரின் கட்டணமாக ரூ.1 மட்டுமே வசூலிக்கப்படும்.

இந்த மருத்துவமனையில்,  ரத்த அழுத்த பரிசோதனை இலவசமாக செய்வதுடன், சர்க்கரை பரிசோதனைக்கு ரூ.25 வசூலிக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் இ.சி.ஜி.யும் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இசிஜி எடுக்க  ரூ.50 கட்ல்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் வரவேற்பை பொறுத்து, விரைவில், மேற்கு ரெயில்வேயின் கீழ் செயல்படும் 24  ரயில் நிலையங்களில் இந்த கிளினிக்குகளை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.