டில்லி,

மிழகத்திற்கு நீட் தேர்வில் இந்த ஆண்டு விலக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு இன்று ஒப்புதல் அளிக்கும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் ‘நீட்’ நுழைவுத் தேர்வில் இருந்து இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கக் கோரும்  அவசர சட்ட வரைவு நேற்று முன்தினம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழக அரசின் சட்டமுன்வடிவை இன்று ஆய்வு செய்கிறது மத்திய சுகாதார அமைச்சகம்.

நீட் விலக்கு அவசர சட்டத்துக்கு ஒப்புதல் தர மத்தியஅரசு உதவி செய்யும் என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதை தொடர்ந்து, தமிழக அரசு சுறுசுறுப்பாக செயல்பட்டது.

அதைத்தொடர்ந்து  தமிழக அரசின் அவசர சட்டத்தை மத்தியஅரசிடம் ஒப்படைத்தார். மேலும், மத்தியஅரசு கேட்கும் பல்வேறு தகவல்களையும் அளித்து வருகின்றனர். இதற்காக   சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்பட உயர் அதிகாரிகள் டில்லியில் முகாமிட்டுள்ளனர்.

அவர்கள் மத்திய சுகாதாரத்துறை, உள்துறை மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகளை இன்று சந்தித்து, கூடுதல் ஆவணங்கள் வழங்குகின்றனர்.

மேலும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளும் சட்ட வல்லுனர்களும் தமிழக அரசின் சட்ட வரைவு அம்சங்களை இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.

மத்திய சட்ட அமைச்சகத்தின் ஆலோசனை பெற்ற பின் உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு உட்பட்டு தமிழக அரசின் அவசர சட்டம் குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் இன்று டில்லி விரைகிறார்.

இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி மருத்துவ மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட்   31க்குள் முடிக்க வேண்டும். ஆனால், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால்,  15 நாட்களில் கவுன்சிலிங்கை முடிப்பது சாத்தியமில்லை.  எனவே ஆகஸ்ட்  31 ஆம் தேதிக்குப் பிறகும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த இந்திய மருத்துவ கவுன்சிலிடம் கூடுதல் அவகாசம் கேட்க தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

இதற்கிடையில் இன்றே தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்கும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.