சென்னை,

மார்ச் 1 முதல் தமிழ்நாட்டில் கோக், பெப்சி கடைகளில் விற்பனை செய்யப்பட மாட்டாது என்று தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.

ஏற்கனவே வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் கடந்த 19ந்தேதி அறிவித்து உள்ளார்.

மார்ச் 1 முதல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்ய மாட்டோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா, இன்று  நிருபர்களிடம் கூறியதாவது,

பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனையை மார்ச் 1ந் தேதி முதல் நிறுத்த முடிவு  செய்து உள்ளோம்.

அதற்கு பதிலாக உள்நாட்டு குளிர்பானங்கள் விற்பனையை ஊக்குவிப்போம் என்றார்.

பீட்டா என்ற அமெரிக்க அமைப்பு தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், அந்த நாட்டு குளிர்பானங்களை குடிக்க மாட்டோம் என ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்கள் கோஷமாக முன் வைத்தனர்.

அவர்கள் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறினார்.

வெள்ளையன்

வெளிநாட்டு நிறுவனமான பீட்டா அமைப்பு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை வாங்கிய நிலையில், தமிழகம் முழுவதும் இளைஞர்கள் பீட்டா அமைப்புக்கு எதிராகவும், ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தியும் போராட்டம் நடத்தி வந்தனர்.

மாணவர்களின் போராட்டத்துக்கு மதிப்பு அளிக்கும் விதமாக, ஜனவரி 26-ம் தேதி முதல் பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களைத் தமிழகத்தில் விற்க தடை விதிப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

தற்போதே தமிழகத்தில் பெரும்பாலான கடைகளில் கோக், பெப்சி விற்பனை கிடையாது என்று அறிவிப்பு பலகை மாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.