ஐதராபாத்:

அனுமதி பெறவில்லை என்பதற்காக, அம்பேத்கார் சிலையை அகற்றி குப்பைக் கிடங்கில் வீசியிருக்கிறார்கள் ஐதராபாத் மாநகராட்சி ஊழியர்கள்.


அரசியல் சாசனத்தின் தந்தை என்று அழைக்கப்படும் பிஆர்.அம்பேத்காரின் 128-வது பிறந்தநாளையொட்டி, 10 அடி சிலை ஐதராபாத்தின் புஞ்சகுட்டா பகுதியில் நிறுவப்பட்டது.
இதற்கு ஐதராபாத் மாநகராட்சியின் அனுமதியை பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து, அம்பேத்காரின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு ஜவஹர்லால் நேரு நகரில் உள்ள குப்பைக் கிடங்கில் போடப்பட்டது.

இது தொடர்பான செய்தி பரவியதும் அனைத்துத் தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
சேதமடைந்த நிலையில் குப்பைக் கிடங்கில் கிடந்த அம்பேத்கார் சிலையை பார்த்து, சிலையை நிறுவியவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, சேதமடைந்த சிலையை குப்பைக் கிடங்கிலிருந்து அகற்றி, விஜய பாஸ்கர் ரெட்டி உள் விளையாட்டு அரங்கத்தில் மாநகராட்சி ஊழியர்கள் வைத்தனர்.

வாகனத்திலிருந்து கீழே விழுந்து அம்பேத்கார் சிலை உடைந்ததாக தெரிவித்த சிலை அமைப்புக் குழுவினர், முறைப்படி அனுமதி கேட்டோம். தராததால்தான் சிலையை அங்கு நிறுவினோம் என்றனர்.

மேலும் ஐதராபாத் மாநகராட்சியும், போலீஸாரும் அம்பேத்காரை அவரது பிறந்தநாள் அன்று குப்பையில் தூக்கி எறிந்து அவமதித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில், அதிகாரிகளின் அனுமதி இன்றி சிலையை எடுத்துச் சென்றதாக குப்பைக் கிடங்கில் பணியாற்றும் பாலாஜி என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ஐதராபாத் மாநகராட்சி ஆணையர் தனா கிஷோர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.  இதற்கிடையே, ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் புகாரின் அடிப்படையில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.