சென்னை: ஐடி எக்ஸ்பிரஸ் சாலையாக திகழும் சென்னையின் பழைய மகாபலிபுரம் சாலையின் உள்கட்டமைப்பு, பல அடுக்குகளைக் கொண்ட ஒரு போக்குவரத்து அமைப்பாக மாற்றப்படவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டத்திற்கு ரூ.3,088 கோடிகள் பட்ஜெட் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகவும் தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாதவரத்திலிருந்து சிப்காட் வரை, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயிலின் மூன்றாவது காரிடார் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்படும் நிலையில், இந்தப் புதிய திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது. மெட்ரோ திட்டமானது, எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்பிற்கு மேல்புறமாக செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த அடுக்கு போக்குவரத்து அமைப்பை 2 கட்டங்களாக செயல்படுத்த மாநில அரசு முடிவுசெய்துள்ளது. முதல் கட்டமாக, தரமணியிலிருந்து சிறுசேரி வரையிலும், இரண்டாம் கட்டமாக, சிறுசேரியிலிருந்து மாமல்லபுரம் வரையிலும் செயல்படுத்தப்படவுள்ளது.
சென்னை மெட்ரோ மற்றும் மாநில அரசின் திட்டம் ஆகிய இரண்டும் ஒருங்கிணைக்கப்படும் என்றும், தரமணியிலிருந்து சிறுசேரி வரையிலான 18 கி.மீ. தூரத்திற்கு முதற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.