சென்னை: ஆம்னி பேருந்துகள் சென்னை கோயம்பேடு உள்பட பல பகுதிகளில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு அவசர கதியில் திறந்த கிளம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இன்னும் அடிப்படை வசதிகள் உள்பட பணிகள் முழுமையாக முற்றுப்பெறாத நிலையில், அவசரம் அவசரமாக பேருந்து நிலையம் திறக்கப்பட்டு, கோயம்பேடு பேருந்து நிலையம் மூடப்பட்டது வெளி ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு பெரும் திண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பேருந்து நிலையத்தை அடைய பயணிகளின் வசதிகளுக்காக நகரங்களில் இருந்து முறையான மாநகர பேருந்து வசதிகள் செய்யப்பட்த நிலையில், அங்கு செல்ல பயணிகள் மேலும் சில மணி நேரம் செலவிட வேண்டியது உள்ளதுடன், பணச்செலவும் அதிகமாக உள்ளது.
இதற்கிடையில், கோயம்பேட்டில் இருந்து செல்லும் ஆம்னி பேருந்துகளும் கிளம்பாக்கத்தில் இருந்துதான் செல்ல வேண்டும் என அரசு உத்தரவிட்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு தேவையா வசதிகள் செய்து தரப்படாத நிலையில், வாடகை கட்டணமும் அதிகம் என்பதால், அவர்கள் அங்கே செல்ல மறுத்து வந்தனர். இதனால், டிராவல்ஸ் நிறுவனங்களுக்கும், பயணிகளுக்கும் ஏற்றவாறு கோயம்பேட்டில் உள்ளது போல் தரைத்தளத்தில் 100க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் வழங்க வேண்டியும், ஆம்னி பேருந்துகளுக்கு நடைமேடை டிராவல்ஸ் நிறுவனங்கள் வாரியாக ஒதுக்காமல், பயணிகளை ஏற்றுவதற்கு ஏதுவாக அரசுப் பேருந்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நடைமேடை போல் ஊர்வாரியாக ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தனர். அதுவரை, ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் டிராவல்ஸ் நிறுவன அலுவலகங்களிலும், சென்னை நகர் பகுதிகளிலும் பயணிகளை ஏற்ற இறக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது. ஆனால், அதற்கு அரசு மறுத்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. முதற்கட்ட விசாரணையின்போது தமிழ்நாடு அரசின் நடவடிக்கை பாராட்டிய நீதிபதி, விசாரணைகளைத் தொடர்ந்து, மறு உத்தரவு வரும்வரை, ஆம்னி பேருந்துகள்சென்னை கோயம்பேடு பேருந்து முனையத்தின் அருகில் ஆம்னி பேருந்து நிறுவனங்களின் பணிமனைகளை பொதுமக்கள் ஏற்கனவே பயன்படுத்தியுள்ளதால், அந்த இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்க பயன்படுத்தலாம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.என். மஞ்சுளா வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ள உத்தரவில் , கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக பயன்படுத்தப்பட்டு, ஆம்னி பேருந்துகள் முடிச்சூா் பணிமனைக்கு மாற்றப்பட்டு விட்டால், கோயம்பேட்டில் இருந்து தான் பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முடிவுக்கு வந்து விடும்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ள ஆம்னி பேருந்து நிறுவனங்களின் பணிமனைகளை பொதுமக்களின் வசதிக்காக பயன்படுத்தப்பட்ட தால், இப்பிரச்னைக்கு தீா்வு காணும் வரை அதனை தொடா்ந்து அனுமதிக்கலாம்.
அதேபோல, போரூா், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் பயணிகளை ஏற்றிக் கொள்ளலாம் என உத்தரவிட்ட நீதிபதி, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் எந்த ஆம்னி பேருந்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி, இறக்காமல் இயக்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளாா்.
மேலும், இணையவழி, கைப்பேசி செயலிகளில் போரூா், சூரப்பட்டு தவிர பயணிகள் ஏற்றி, இறக்க வேறு இடங்களை குறிப்பிடக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதி, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த இடைக்கால ஏற்பாடுகளை தொடரலாம் என உத்தரவிட்டு, வழக்கை இறுதி விசாரணைக்காக ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளாா்.