டெல்லி: உலக நாடுகளை மிரட்டி வரும் புதிய பிறழ்வு வைரசான ஒமிக்ரான் தொற்று பாதிப்பு இந்தியாவிலும் பரவத்தொடங்கி உள்ளது. இதுவரை 38 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் நூற்றுக்கணக்கானோருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளது.

கடந்த இரு ஆண்டுகளாக உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்று, தடுப்பூசிகளால் சற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து,  கொரோனா வைரசின் மாறுபாடான டெல்டா தொற்றை மிஞ்சும் அளவிற்கு புதிய பிறழ்வான ஒமிக்ரான் பரவி வருகிறது. இந்த தொற்று மிகத்தீவிரமாக பரவக்கூடியது என்றும், தடுப்பூசி செயல்திறனையும் குறைப்பதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் முதன்முதலாக  கடந்த 2ஆம் தேதி ஒமைக்ரான் தொற்று உள்ளே நுழைந்தது. இந்த தொற்று பரவலை தடுக்க மத்தியஅரசு,  சர்வதேச விமான கட்டுப்பாடுகள்  நீடிட்டித்து, விமான நிலையங்களில் கண்காணிப்புகளை தீவிரப்படுத்தி உள்ளதுடன், மாநில அரசுகளும் தீவிர கண்காணிப்பை ஏற்படுத்தும்படி வலியுறுத்தி உள்ளது.

டிசம்பர்  2-ந் தேதி கர்நாடக மாநிலத்தில் தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்த ஒருவருக்கும், பெங்களூரு டாக்டர் ஒருவருக்கும் ஒமிக்ரான்  தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 6-ந்தேதி இங்கிலாந்தில் இருந்து கொச்சி விமான நிலையம் வந்த எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஒமிக்ரான் பரிசோதனை செய்யப்பட்டது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் பாதிப்பு பதிவாகி உள்ளது. இதுவரை 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படாத நிலையில்,  தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா என்ற இரு மாநிலங்களிலும் ஒமைக்ரான் தொற்று உறுதியானது தமிழகத்திற்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இதனால் மக்கள் சற்று முன்னெச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும் என்றும், முக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.