சென்னை: சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் அமைந்துள்ள ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி மீண்டும் தமிழகஅரசின் தலைமைச் செயலகமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக செய்தியாளரின் கேள்விக்கு பதில் தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து, அங்கு மீண்டும் தலைமைச்செயலகம் வருவதை கோடிட்டு காட்டியுள்ளது.

மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி முதல்வராக இருந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இதற்கான இடம் தேர்வுசெய்யப்பட்டு, ஜூன் 2008ல் இதற்காக அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி அடிக்கல் நாட்டினார். இரண்டு ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு 2010 மார்ச் 13ஆம் தேதியன்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார். புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த அலுவலகங்கள் படிப்படியாக புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டு வந்தன.

ஆனால் அதன்பிறகு 2011 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று  ஆட்சியை கைப்பற்றிய ஜெயலலிதா, தனது முதல்பணியாக, அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள் புதிய கட்டடம் அரசு இயங்குவதற்கு ஏதுவாக இல்லையெனக் கூறி, மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே தலைமைச் செயலகத்தை மாற்றினார . அதைத்தொடர்ந்து, புதிய தலைமைச் செயலகக் கட்டத்தை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றுவதாகவும் உத்தரவிட்டார். இதையடுத்து புதிய தலைமைச் செயலகக் கட்டம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. அத்துடன் மருத்துவக்கல்லூரிகளும் அமைக்கப்பட்டு, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள்  தங்குவதற்கான கட்டிடங்களும் கட்டப்பட்டன.

ஆனால், 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள திமுக அரசு,  ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மூடு விழா நடத்த திட்டமிட்டு உள்ளது. சமீபத்தில், முதல்வர் ஸ்டாலின் கிண்டி கிங்ஸ் இன்டிடியூட் வளாகத்தில் 500 படுகைகளுடன் கூடிய பன்னோக்கு மருத்துவமனை கட்டப்படும் என அறிவித்தார். இதனால் இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பை எட்டியது. ஓமந்தூரார் மருத்துவமனை கிண்டிக்கும் மாற்ற திமுக அரசு திட்டமிட்டு உள்ளதாக விமர்சிக்கப்பட்டது.

இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம்,   ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவ மனையை புதிய இடத்திற்கு மாற்றுவது குறித்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், முதல்வர் இதில் தலையீட்டு இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும்,   புதிதாக பல்நோக்கு மருத்துவமனையைக் கிண்டி, கிங் வளாகத்தில் உருவாக்குவதை நாங்கள் வரவேற்கிறோம். அதே சமயத்தில், ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை அங்கிருந்து கிங் மருத்துவ வளாகத்திற்கு மாற்றுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை அங்கிருந்து மாற்றப்படுவது என்ற செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில், அதனை உடன் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தமிழகத்தில் விவாதப்பொருளாக மாறி வரும் நிலையில்,  தந்தி தொலைக்காட்சி  செய்தியாளர், தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம்  ஓமந்தூரார் மருத்துவமனை குறித்து கேள்வி எழுப்பினார்.

நன்றி: வீடியோ உதவி: தந்தி டிவி

அப்போது, ஓமந்தூரார் மருத்துவமனையை தலைமைச் செயலகமாக மாற்றும் திட்டம் அரசுக்கு இருக்கிறதா?   என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நேரடியாக பதில் அளிக்காத அமைச்சர் மாசு., கிண்டியில் உலகத்தரம் வாய்ந்த பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைஅமைய இருக்கிறது என்பதை உறுதி செய்ததுடன், ஓமந்தூரார் மருத்துவமனையில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள பல கட்டிடங்கள், அறைகள் சும்மா இருப்பதாகவும், அமைச்சர்கள் அறை, அலுவலக அறைகள் வெறுமனே உள்ளது, சட்டமன்ற கட்டிடம் மற்றும் பல பகுதிகள் காலியாகவே உள்ளது என கூறினார்.

அமைச்சரின் நாசூக்கான பதிலைப் பார்க்கும்போது, ஓமந்தூரார் மருத்துவமனைக்கு விரைவில் மூடு விழா நடத்தப்படும் என்பது உறுதியாகி உள்ளது.

திமுக ஆட்சியால் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக,  முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா தனது அதிகார மமதையால், கோடிக்கணக்கான ரூபாயை பாழடித்து,  அதை மருத்துவமனையாக மாற்றினார். இருப்பினும், தற்போது அந்த மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், ஜெயலலிதாவைப்போல திமுக அரசு, அதை மீண்டும் தலைமைச்செயலகமாக மாற்றுவதும், அதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுவதையும் மக்கள் எந்த அளவுக்கு வரவேற்பார்கள் என்பது தெரியவில்லை.

மக்கள் நலப்பணியில் மோதல் போக்கு எதற்கு,  கடுமையான நிதி நெருக்கடியில் தமிழகஅரசு  தள்ளாடும் சூழலில், இந்த நடவடிக்கை தேவைதானா என்பதை அரசு சிந்தித்து பார்க்க வேண்டும். புதிய தலைமைச்செயலகம் அவசியம் என கருதினால், தேவைப்படின், வேறொரு இடத்தை தேர்வு செய்து, அதை கட்டலாமே…..!

ஸ்டாலின் தலைமையிலான திமுகஅரசு , ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மூடுவிழா நடத்தினால், ஜெயலலிதாவின் ஆணவத்துக்கும், திமுகவின் சாதனைக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்…