புவனேஸ்வர்

ரிசா மாநில முன்னாள் அமைச்சரும் பாஜகவின்  தலைவருமான ஜெயநாரயண் மிஸ்ராவின் கைதை எதிர்த்து பாஜக அமளியில் ஈடுபட்டதால் ஒரிசா சட்டப்பேரவை  ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஒரிசா மாநிலம் பார்கர் மாவட்டத்தில் கடந்த மாதம் 23ஆம் தேதி அன்று அம்மாநில சட்ட அமைச்சரின் சகோதரர் சென்றுக் கொண்டிருந்த வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றது.    இந்த தாக்குதலில் பிஜு ஜனதா தளம் கட்சியின் தொண்டர் ஒருவர் மரணம் அடைந்தார்.    அதனால் இந்த மாதம் 15ஆம் தேதி காவல்துறையினர் பாஜக தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயநாராயன் மிஸ்ராவையும் மற்றொருவரையும் கைது செய்தனர்.

தற்போது நடந்து வரும் ஒரிசா மாநில சட்டப்பேரவை நிதிநிலைக் கூட்டத்தில் பாஜக வினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்ட மிஸ்ராவை விடுதலை செய்ய வேண்டும் எனவும் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் பாஜகவினர் அவையில் கோஷமிட்டு ரகளை செய்தனர்.   இதனால் இந்தக் கூட்டத்தொடர் அடிக்கடி ஒத்தி வைக்கப்படுகிறது.

ஒரிசா அரசின் தலைமைக் கொறடா அமர் சத்பதி, “ இது ஒரு குற்றவியல் வழக்கு.  அதனால் அரசு தலையிட முடியாது.   காவல் துறையின் தீவிர விசாரணைக்குப் பின்னரே மிஸ்ரா கைது செய்யப் பட்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.

ஒரிசா சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் நரசிங்க் மிஸ்ரா, “இந்த அமளி பாஜக மற்றும் பிஜு ஜனதா தள் நடத்தும் கூட்டு சதியாகும்.   காங்கிரஸ் மாநில விவசாயிகள் துயர் குறித்து விவாதிப்பதை தடுக்கவே இரு கட்சிகளும் சேர்ந்து இந்த அமளியை நடத்துகின்றன” என தெரிவித்துள்ளார்.