லைத்தாயின் தவப்புதல்வன் நடிகர் சிவாஜிகணேசனின் 92வது பிறந்தநாள் இன்று. இதை கடந்த ஆண்டு முதல் தமிழக அரசு, அரசு விழாவாக  கொண்டாடி வருகிறது. தென்னிந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான சிவாஜிகணேசன்,  நடிகர் மட்டுல்லாமல் சிலகாலம் அரசியல்வாதியாகவும் வலம் வந்தார்.

தெளிவான தமிழ் உச்சரிப்புடன், உணர்ச்சிகரமான பேச்சுக்கு சொந்தக்காரரும், கருத்து ஆழமிக்க திரைப்படங்களில் கதாபாத்திரமாகவே வாழ்ந்து தமிழ் மக்கள் மட்டுமின்றி உலக மக்களின்  மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜிகணேசன் அவர்களின் பிறந்ததினம்

தனது குழந்தைப் பருவத்திலிருந்தே நடிப்பதில் பேரார்வம் கொண்ட அவர், அதில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். பின்னர், அவர் தெலுங்கில் ஒன்பது திரைப்படங்கள், கன்னடத்தில் ஒன்று, மலையாளத்தில் இரண்டு, இந்தியில் இரண்டு திரைப்படங்கள் என முன்னூறுக்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1927ம் ஆண்டு அக்டோபர் 1ந்தேதி சிவாஜி கணேசன் , சின்னையா மன்றாயருக்கும், ராஜாமணி அம்மாளுக்கும் மகனாக விழுப்புரத்தில் 1 அக்டோபர் 1927 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையாப் பிள்ளை கணேசன்.

சிவாஜி கணேசன் அவர்கள், தனது இளம்வயதிலேயே நாடகங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டதாலும், அதில் பங்கேற்பதில் ஆர்வம் இருந்ததாலும், தனது கனவினை நிறைவேற்ற ஒன்பது வயதிலேயே வீட்டை விட்டு ஓடிவந்தார். பின்னர், அவரது சொந்த அம்மாவே நாடகக் குழுவில் இடம் பெற உதவி செய்தார். சிவாஜி கணேசன் அவர்கள், கமலா என்பவரை மணமுடித்தார். அவர்களுக்கு ராம்குமார், பிரபு என்ற மகன்களும், சாந்தி, தேன்மொழி என்ற மகள்களும் உள்ளனர்.

திரையுலகுக்கு வரும் முன், நாடகங்களில் நடித்த சிவாஜி கணேசன் அவர்கள், ‘இந்து ராஜ்ஜியம்’ என்ற நாடகம் மூலமாக மிகவும் பிரபலமானார். இதில் பேரரசர் சிவாஜியாக நடித்த அவரின், நடிப்புத் திறமையைத் தந்தைப் பெரியார் அவர்கள் பெரிதும் பாராட்டினார். அவர், அவரை ‘சிவாஜி கணேசன்’ என்றழைத்தார். இந்நிகழ்ச்சியே, அவருக்கு ‘சிவாஜி கணேசன்’ என்ற பெயரை நிலைக்கச் செய்தது.

தமிழ்த் திரையுலகில், ‘பராசக்தி’ என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமான சிவாஜி கணேசன் அவர்கள், முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர், இரண்டு ஹிந்தி திரைப்படங்கள், ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். அவருக்குத் தெளிவான, உணர்ச்சிப் பூர்வமான தமிழ் உச்சரிப்பும், நல்ல குரல்வளமும், சிறந்த நடிப்புத் திறனும் இருந்ததால், ‘நடிகர் திலகம்’ என்றும், ‘நடிப்புச் சக்கரவர்த்தி’ என்றும் மக்களாலும், திரையுலகத்தினராலும் அழைக்கப்பட்டார்.

அக்காலத்தில், தேசத் தலைவர்களின் பத்திரங்களை ஏற்றுத் திறம்பட நடித்த முக்கிய நடிகர்களுள் ஒருவர், சிவாஜி கணேசன் அவர்கள். ‘இராஜராஜ சோழன்’ மற்றும் ‘கப்பலோட்டிய தமிழன்’ ஆகிய திரைப்படங்களே இதற்கு சான்றாகும். ‘மனோகரா’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ போன்ற திரைப்படங்கள், இவரின் வீர வசனத்திற்காகப் பெயர்ப் பெற்றவை. ‘பாசமலர்’, ‘வசந்த மாளிகை’ போன்ற திரைப்படங்களில் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்பைக் காணலாம். ‘கந்தன் கருணை’, ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’ போன்ற பக்தித் திரைப்படங்களும் பெரிதும் பேசப்பட்டவை.

அரசியல் வாழ்க்கை

அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த சிவாஜி கணேசன் அவர்கள், 1955 வரை திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1961ல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினரானார். பின்னர், கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 1987ல் கட்சியை விட்டு விலகி, ‘தமிழக முன்னேற்ற முன்னணி’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். பெரும்நடிகராக இருந்தாலும், அவருக்கு அரசியலில் எம்.ஜி.ராமச்சந்திரன் போல செல்வாக்குக் கிடைக்கவில்லை. ஆகவே, தனது இறுதிக்காலத்தில் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

சிவாஜி பெற்ற புகழ்மிக்க விருதுகள்:

1960 – ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.

1966 – பத்ம ஸ்ரீ விருது

1984 – பத்ம பூஷன் விருது

1995 – செவாலியே விருது (Chevalier)

1997 – தாதா சாகேப் பால்கே விருது

1962 – சிறப்பு விருந்தினராக அமெரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் ‘ஒரு நாள் நகரத் தந்தை’ என கௌரவிக்கப்பட்டார்.

இறப்பு

தென்னிந்திய திரைப்படத் துறையில், சிறந்த நடிகராக விளங்கிய சிவாஜி கணேசன் அவர்கள், சுவாசப் பிரச்சினைக் காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஜூலை 21, 2001 ஆம் ஆண்டு தனது 74வது வயதில் மரணமடைந்தார்.

உலக நாடுகளில் சிவாஜி…

உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற சிவாஜி கணேசனுக்கு அமெரிக்காவில் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அதுபோல சிவாஜிக்கு மிகப்பெரிய மரியாதையை தந்த நாடு பிரான்ஸ் என்று கூறலாம்.

பிரான்ஸ் நாடு சிவாஜிக்கு வழங்கிய ‘செவாலியே விருது’ மதிப்பில் மிக உயர்ந்தது. அதாவது ஆஸ்கர் விருதுக்கு இணையான மதிப்பு கொண்ட விருது. இந்த விருதை இதுவரை உலகில் நான்கு நடிகர்களுக்கே பிரான்ஸ் வழங்கியுள்ளது.

சிவாஜி நடித்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம் கெய்ரோவில் நடந்த ஆசிய, ஆப்பிரிக்கப் படவிழாவில் கலந்து கொண்டது. அந்த படவிழாவில் பங்கேற்க சிவாஜி, பத்மினி எல்லோரும் போயிருந்தார்கள்.

அந்தப் படவிழாவில் சிவாஜி ஆசிய, ஆப்பிரிக்க அளவில் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்கள் என எடுத்துக்கொள்ளும்பொழுது உலக மக்கள் தொகையில் முக்கால் பகுதி மக்கள் தொகை இந்த இரு கண்டங்களிலேயே அடங்கும்!

இந்தியாவும், சீனாவும் மட்டுமே பெரும் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகள், ஜப்பான், ரஷ்யா, ஹாங்காங்… போன்ற ஏராளமான நாடுகளுடன் ஆப்பிரிக்கா கண்டம் முழுவதும் உள்ள ஏராளமான நாடுகளும் இந்தப் படவிழாவில் பங்கு பெற்றவையாகும்.

இவ்வளவு பெரிய படவிழாவில் சிவாஜியை சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்தப் பின்னும் இந்திய அரசு வழங்கும் சிறந்த நடிகர் விருதை சிவாஜிக்கு தராமலேயே இருந்துவிட்டார்கள். காரணம் இந்திய அரசு சார்பான இந்த விருதில் அவ்வப்போது செல்வாக்கான மனிதர்களின் குறுக்கீடு இருந்து வந்ததேயாகும்.

ஆசிய, ஆப்பிரிக்க அளவில் சிறந்த நடிகர் விருது பெற்ற ஒருவருக்கு இதற்கு மேலும் நாம் விருது கொடுக்காமல் தாமதித்தால் அதனால் இந்திய விருதின் மரியாதை குறையும் என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்கவே யில்லை.

ஆனால், சிவாஜியைப் பொருத்தவரையில் அவர் நடிப்புத் துறையில் நிறைகுடமாக இருந்ததால் விருதுகளைப் பற்றி எப்போதுமே கவலைப்பட்டதில்லை. அத்துடன் தனக்கு விருது தரப்படவில்லை என்பதை மனதில் குறையாக வைத்து பேசுவதுமில்லை. யாராவது வலிய அவரிடம் இது சம்பந்தமாக பேசி ‘‘உங்களுக்கு ஏன் இந்திய அரசின் விருது தராமலே இருந்துவிட்டார்கள்?’’ என கேட்கும்பொழுது அதற்கு சிவாஜி மிகப்பெருந்தன்மையாக பதில் கூறியிருக்கிறார்.

‘‘விருது தருபவர்கள் அந்த விருதுக்கென்று எதிர்ப்பார்க்கும் தகுதிகள் நம்மிடம் இல்லாது இருக்கலாம்’’ என்றே சிவாஜி பதில் அளித்திருக்கிறார்.

ஆசிய, ஆப்பிரிக்க சிறந்த நடிகர் விருது சிவாஜிக்கு கிடைத்தபின் அமெரிக்க அரசு சிவாஜியை தங்கள் நாட்டிற்கு அழைத்து கவுரவிக்க விரும்பியது. எனவே ‘சிவாஜி தங்கள் நாட்டிற்கு வருகை தர வேண்டும்’ என அமெரிக்க அரசு அழைப்பு விடுத்தது. இதுபோன்ற ஒரு அழைப்பு அதுவரை இந்திய நடிகர்கள் யாருக்கும் கிடைத்ததில்லை. சிவாஜியின் நடிப்புத் திறமையை அங்கே உள்ளவர்கள் பார்க்கிற வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அவர்கள் கேள்விப்பட்ட செய்திகளை வைத்து சிவாஜியின் மிகப்பெரிய ஆற்றலை நன்றாகவே புரிந்திருந்தார்கள். அதனால் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் எல்லாம் அவருக்கு சிறப்பான மரியாதை தந்தார்கள்.

சிவாஜி அமெரிக்கா சென்ற காலகட்டத்தில் அங்கே புகழ்பெற்ற நடிகர்களாக விளங்கிய மார்லன் பிராண்டோ, யூல் பிரின்னர், சார்லஸ் ஹாஸ்டன்… போன்ற பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் சிவாஜியை வரவேற்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரை கவுரவித்தார்கள்.

அப்போது ஹாலிவுட்டின் மிகப்பெரிய நடிகர்களாக இருந்த ஐந்து நடிகர்கள் சிவாஜியோடு படம் எடுக்க விரும்பி சிவாஜியை நடுவே அமரச்செய்து மற்றவர்கள் அவர் அருகே நின்று கொண்டும் சிவாஜி அமர்ந்திருந்த நாற்காலியில் கைப்பிடிகளில் அமர்ந்து கொண்டும் படம் எடுத்துக் கொண்டார்கள்.

சிவாஜி சில பெரிய நடிகர்களின் தனிப்பட்ட அழைப்பின் பெயரில் அவர்கள் இல்லங்களுக்கும் சென்றார். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சார்லஸ் ஹாஸ்டன். இவர் உலக அளவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட ‘டென் கமான்மெண்ட்ஸ்’ படத்திலும் ‘பென்ஹர்’ படத்திலும் நடித்து ஆஸ்கர் விருது பெற்றவர்.

இவருடைய இல்லத்திற்கு சிவாஜி சென்றபொழுது சார்லஸ் ஹாஸ்டன் தம்பதிகள் அவரை வரவேற்றார்கள். சிவாஜி அப்போது சார்லஸ் ஹாஸ்டனின் துணைவியாருக்கு தமிழ்நாட்டுப் பட்டுப் புடவையை பரிசாகத் தந்தார். திருமதி சார்லஸ் ஹாஸ்டனுக்கு அந்தப் பரிசைப் பெற்றுக் கொண்டதில் பெரிய மகிழ்ச்சி! எனவே தங்கள் இல்லத்திற்கு வந்த விருந்திருனரான சிவாஜியை கவுரவிக்க அந்தப் பட்டுப் புடவையை அப்போதே உடுத்திக்கொள்ள விரும்பினார்.

ஆனால் அமெரிக்கப் பெண்மணியான அவருக்கு புடவைக் கட்டிய பழக்கமேயில்லை. எனவே இதை எப்படி உடுத்திக் கொள்வது என அவர் கேட்டபொழுது சிவாஜி புடவையின் முனையை இப்படி மடித்து இடுப்பில் சொருகி புடவையை சுற்றிக்கொள்ள வேண்டும் என்பதை நடித்துக் காட்டினார். ஆனால் திருமதி சார்லஸ் ஹாஸ்டனுக்கு அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே சிவாஜியிடம், ‘‘இதை நான் உடுத்திக் கொள்ள எனக்கு உதவி செய்யுங்கள்’’ எனக் கேட்டுக் கொண்டார்.

சிவாஜிக்கு இதைக் கேட்டு சற்று திகைப்பு! ஒரு பெண்மணி புடவையை உடுத்திக் கொள்ள நாம் எப்படி உதவ முடியும்? என்று தாமதித்தார். ஆனால் சார்லஸ் ஹாஸ்ட்அனோ ‘‘என் மனைவிக்கு நீங்கள் உதவ வேண்டும்’’ என வற்புறுத்தி கேட்கலானார். அதன்பிறகு சிவாஜி திருமதி சார்லஸ் ஹாஸ்டன் புடவை அணிந்து கொள்ள உதவினார்.. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் சிவாஜி என்ற மாபெரும் கலைஞரிடம் அவர்களுக்கிருந்த மரியாதையை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

அமெரிக்காவில் கலையுலகம் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் மற்றும் உள்ள முக்கிய மனிதர்களும் சிவாஜியை தங்கள் விருந்தினராக அழைத்துப் பெருமைப்பட்டார்கள். அவர்களில் ஒரு சீமாட்டி சிவாஜிக்கு மிக உயர்ந்த பொருளைத் தரப்போவதாக கூறிக்கொண்டு ஒரு விலையுயர்ந்த சுருட்டை புகைப்பதற்கு தந்தார்.

சிவாஜி அந்த சுருட்டை கையிலே வாங்கிப் பார்த்துவிட்டு அந்தப் பெண்மணியிடம் கூறினார், ‘‘அம்மா இது உங்களுக்கு அபூர்வப் பொருளாக இருக்கலாம். ஆனால் இந்தச் சுருட்டு நான் இருக்கிற நாட்டிலே உற்பத்தியாகிற சுருட்டு, அதுவும் என் சொந்த ஊரான திருச்சி அருகிலுள்ள உறையூரில் தயாராகிற சுருட்டு’’ என விளக்கினார். அதைக்கேட்டு அந்தப் பெண்மணி பெரிதாக நகைத்தார்.

சிவாஜிக்கு அங்கே இன்னொரு மரியாதையும் கிடைத்தது. அமெரிக்காவிலுள்ள ஒரு நகரத்தின் மேயர் சிவாஜியை வரவேற்று ஒருநாள் மேயராக சிவாஜியை கவுரவப் பதவி ஏற்க வைத்தார். அதற்கு அடையாளமாக தங்கச் சாவி ஒன்றை அன்று முழுவதும் சிவாஜி கையிலே வைத்திருக்க வேண்டும் என அவரிடம் ஒப்படைத்தார்.

அமெரிக்காவில் சிவாஜிக்கு மகத்தான வரவேற்பு கிடைத்தது என்ற செய்தி தமிழகத்திற்கு எட்டிய நிலையில் தமிழக கலைஞர்கள் எல்லாம் சிவாஜியை சிறப்பாக வரவேற்க வேண்டும் என புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையிலே முடிவு செய்தார்கள். அவ்விதம் சிவாஜிக்கு அவர் சென்னையில் வந்து இறங்கியபொழுது கலைஞர்கள் எம்.ஜி.ஆர். தலைமையில் சிறந்த வரவேற்பை அளித்து கவுரவித்தார்கள்.‘

சிவாஜிக்கு செவாலியே விருது கிடைத்தது எப்படி?

சிவாஜி நடித்த ‘நவராத்திரி’ படத்தைப் பார்த்துவிட்டு சிவாஜிக்கு ‘செவாலிய விருது’ அளிக்க பிரான்ஸ் நாடு முன் வந்தது. அந்தப் படத்தைப் பார்த்து உடனே பிரான்ஸ் தேர்வு கமிட்டி ‘செவாலிய விருது’ கொடுக்க முடிவு செய்துவிட வில்லை. ஒன்பது வேடங்களில் சிவாஜி வித்தியாசமான ஒன்பது மனிதர்கள்போல் நடித்திருக்கும் அந்த அற்புதமான நடிப்பில் முதலில் அவர்களுக்கு நிறைய சந்தேகம் இருந்தது. இது ஒரே நடிகராக இருக்க முடியுமா? என்ற சந்தேகத்தின் பெயரில் பலவித பரிசோதனைகள் செய்து கடைசியில்தான் அவர் ஒரே நடிகர்தான் என்பதை கண்டுபிடித்தார்கள்.

புகழ்பெற்ற பல இயக்குனர்கள் அமர்ந்து அந்தப் படத்தைப் போட்டுப்பார்த்து செவாலியே விருது வழங்குவது பற்றி முடிவு செய்தார்கள். இந்த விருதை சிவாஜிக்கு அளிப்பதற்கு முன் உலக அளவில் புகழ்பெற்ற நடிகர்கள் பட்டியலை வைத்துக் கொண்டு அவர்கள் நடித்த படங்களையெல்லாம் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்தார்கள். அதன் இறுதியிலேதான் சிவாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிவாஜியைப் பற்றி இந்தியாவிலே உள்ள ஒரு கலை மேதையிடம் கருத்தறிய அவர்கள் பிரபல வங்க இயக்குனர் சத்யஜித்ரேயை அணிகினார்கள். அவரோ, ‘சிவாஜி செவாலியே விருதுக்கு மிக தகுதியான கலைஞர்’ எனக் கருத்து தெரிவித்தார்.

சிவாஜியின் நடிப்பைப் பார்த்த ஒரு பிரான்ஸ் இயக்குனர் ‘‘இவருக்கு ஏன் இதுவரை ஆஸ்கர் விருது கொடுக்கப்பட வில்லை? என்ற சந்தேகத்தை கேட்டார். அவருக்கு இன்னொரு இயக்குனர் பதில் கூறும்பொழுது, ‘‘ஆஸ்கர் விருது இதுவரை வழங்கப்படாததற்கு சேர்த்துதானே இந்த செவாலியே விருதை வாங்குகிறோம்’’ எனக் கூறினார். அதன்பிறகே சிவாஜிக்கு பிரான்ஸ் நாடு செவாலியேவிருது வழங்கி கவுரவித்தது.