மதுரை:

தேனியில் அமைய இருக்கும் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து  விழிப்புணர்வு நடைபயணத்தை  மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  இன்று தொடங்குகிறார் .

இந்த நடைபயணத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள  மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில், தேவாரம் அருகே பொட்டிப்புரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் சுமார் ரூ.1,500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது.  நியூட்ரினோ  ஆராய்ச்சி செய்வதற்கான பணியை தொடங்க  கடந்த 2011ம் ஆண்டு  சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு காரணமாக  பசுமை தீர்ப்பாயம்  அனுமதி மறுத்தது. அதைத்தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த திட்டத்துக்கு  6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அனுமதி வழங்கி உள்ளது.

இது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தை தமிழகத்தில் அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தியும் நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நடைபயணத்தை மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார்.

அதன்படி இன்று காலை 9 மணிக்கு மதுரை பழங்காநத்தம் பகுதியில் இருந்து தனது நடை பயணத்தை தொடங்குகிறார். இந்த  நடைபயணத்தை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

மேலும்,  தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், தமிழக காங்கிரஸ் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கே.எம்.அப்பாஸ், மே 18 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி உள்பட பலர் வாழ்த்திப் பேசுகின்றனர்.

மதுரையில் இருந்து கம்பம் வரை 10 நாட்களுக்கு வைகோ நடைப்பயணம் மேற்கொள்கிறார்.