சென்னை: நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை முருகன், தனது யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்ட அனைத்து வீடியோ பதிவுகளையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

முன்னதாக, யுடியூப்பில் பதிவு செய்த வீடியோக்களை சமர்பிக்க நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகனுக்கு என்.ஐ.ஏ உத்தரவிட்டிருந்த நிலையில், அவர் அனைத்து வீடியோக்களையும் ஒப்படைத்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 நபர்களில் ஒருவர் நாம் தமிழர் கட்சிக்கு தொடர்புடைய நபர் என்பது தெரியவந்ததை அடுத்து, பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன், முருகன், விஷ்ணு, மதிவாணன், கார்த்திக் ஆகிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்தினர். கடந்த வாரம் இந்த சோதனை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன்படி, கோவையில் 2 இடங்கள், சென்னை, திருச்சி, சிவகங்கை, தென்காசி ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.  திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் முன்னணி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதுபோல, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல்லை மதிவாணன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. மேலும்,  சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தென்னகம் விஷ்ணு என்பவர் வீட்டு,  கோவை ஆலாந்துறை ஆர்.ஜி.நகரில் ரஞ்சித் குமார் வீடு, காளப்பட்டி பகுதியில் முருகன் என்பவரின் வீட்டிலும் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றது. வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றது தொடர்பாக சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.

இந்த சோதனைகளின்போது, பல முக்கிய ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குறிப்பாக விடுதலை புலிகளுக்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து, சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 5 பேருக்கு என்ஐஏ சம்மன் அனுப்பி, 2 நாட்கள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டது. பல தகவல்களை அவர்களிடம் வாக்குமூலமாக பெற்று அதனை என்ஐஏ அதிகாரிகள் வீடியோ பதிவு செய்தனர். அப்போது தொடர்ச்சியாக வெளிநாட்டில் உள்ள நபர் ஒருவர் நாம் தமிழர் நிர்வாகிகள் 5 பேரிடம் பேசியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, சாட்டை முருகன் தனது யுடிடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ள அனைத்து வீடியோக்களையும் தரும்படி என்ஐஐ உத்தரவிட்டருந்தது. அதன்படி, தன்னிடம் இருந்த அனைத்து வீடியோக்களையும் சாட்டை முருகன் என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.