டெல்லி: பங்கு சந்தை முறைகேடு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சித்ரா ராமகிருஷ்ணனுக்கு டெல்லி உயர்நீதிமன்றம்  ஜாமீன் வழங்கியது.

தேசிய பங்குசந்தையின் தலைமை பொறுப்பில் சித்ரா ராமகிருஷ்ஷன் இருந்தபோது, பெரும் முறைகேடுகள் நடைபெற்றது தெரிய வந்தது. தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனராக கடந்த 2013 முதல் 2016-ம் ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ணன் பணியாற்றி வந்தார்.  அவர் பொறுப்பில் இருந்த போது, தேசிய பங்குச் சந்தையில் நிதி தொடர்பான முடிவுகள், நியமனங்கள் தொடர் பாக பல்வேறு முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, இமய மலையில் உள்ள சாமியார் ஒருவரின் ஆலோசனையின்படி என்எஸ்இ தொடர்பான முடிவுகளை சித்ரா ராமகிருஷ்ணா எடுத்ததாகவும், அவரிடம் என்எஸ்இ.யின் ரகசிய தகவல்களை பகிர்ந்து கொண்டு ஆலோசனை கேட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, ஓபிஜி செக்யூரிட்டீஸ், அதன் நிர்வாக இயக்குநர் சஞ்சய் குப்தா, என்எஸ்இ அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பங்குச் சந்தையின் கம்ப்யூட்டர் சர்வர்களைப் பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக சிபிஐ கூறியது. மேலும் அமலாக்கத்துறையும் வழக்குபதிவு செய்து கைது செய்து விசாரித்து வந்தது.

இதைத்தொடர்ந்து,  மும்பையில் உள்ள சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் அதிகாரிகள் பலரின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணையும் நடத்தினர். மேலும் சித்ரா ராமகிருஷ்ணா முன்னாள் சிஓஓ ஆனந்த் சுப்ரமணியன், ரவி நாராயண் ஆகியோர் வெளி நாடு செல்லவும் சிபிஐ தடை விதித்தது. பின்னர் ஆனந்த் சுப்பிரமணியத்தை சிபிஐ அதிகாரிகள்  கடந்த ஆண் மார்ச் மாதம் 6ந்தேதி கைதுசெய்தனர்.

இதையடுத்து சித்ரா ராமகிருஷ்ணன்  சார்பில் ஜாமீன் கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அது தள்ளுபடி செய்யப்பட்டதுடன், அவரிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. பின்னர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கில் பிணை பெற்றார்.  இதையடுத்து சித்ரா ராமகிருஷ்ணன் தரப்பில் அமலாக்கத்துறை வழக்கில்  ஜாமின் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை முடிநத் நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம், இன்று சித்ரா ராமகிருஷ்ணனுக்கு  ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே  சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்த நிலையில் தற்போது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் கிடைத்துள்ளது.