டெல்லி: கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெற இருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு  மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதற்கு முன் 2011-ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரம் வெளியிடப்பட்டது. 2021-ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் வரும் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கி வருகிற செப்டம்பர் 30-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க தீர்மானிக்கப்பட்டு இருந்தது. இதில்,  வீட்டில் எத்தனை மொபைல்போன்கள் உள்ளது என்பது, ஆதான் எண்  உள்பட 34 வகையான விவரங்கள் சேகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி,   மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாகவும், இனி இந்த ஆண்டில் கணக்கெடுப்பு நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த பணியில், லட்சக்கணக்கான அதிகாரிகள் வீடு, வீடாக சென்று கணக்கெடுக்க வேண்டும் என்பதால் அனைவருடைய உடல் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும்,  கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு அத்தியாவசியமான பணி இல்லை என்றும், ஓர் ஆண்டு தாமதமானாலும்கூட எந்த பாதிப்பும் இல்லை என்றும் அதிகாரிகள் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.