இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் திடீரென மேற்கொண்ட சரமாரி குண்டு வீச்சு காரணமாக பாலஸ்தீனுக்கு சொந்தமான காசா பகுதியை இஸ்ரேல் ராணுவம் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்திவருகிறது.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடந்துவரும் இந்த போரில் 5000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

உலகில் மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களில் மூன்றாவது இடமாக உள்ள காசா மீது நடத்தப்படும் இந்த தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து வருகிறார்கள்.

இதனை பெரிதும் கண்டிக்காத அமெரிக்கா, காசா-வில் நிலவிவரும் பதற்றமான சூழலால் அமெரிக்காவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளது.

இந்த நிலையில் பொதுமக்கள் மீதான வன்முறையையும் அவர்கள் கொல்லப்படுவதயும் எதிர்த்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் ரஷ்யா தீர்மானம் கொண்டுவந்தது.

இந்த தீர்மானத்திற்கு ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட நான்கு நாடுகள் மட்டுமே ஆதரவு அளித்ததை அடுத்து இந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.

தவிர, பாலஸ்தீனத்தில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல் மற்றும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை எதிர்த்து எந்த ஒரு நாடும் மனிதாபிமான அடிப்படையில் கூட வாய்திறக்கவில்லை என்பது மிகவும் வேதனை அளிக்கிறது என்று ஐக்கிய அரபு நாடுகள் தெரிவித்துள்ளது.

உணவு, குடிநீர், மின்சாரம், எரிபொருள், மருத்துவ உதவிப் பொருட்கள், மருந்துகள் எதுவும் இல்லாமல் 20 லட்சம் பேர் 360 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பலமுனை தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல் அங்குள்ள மக்களை காசா பகுதியின் தெற்கு நோக்கிச் செல்ல உத்தரவிட்டுள்ள நிலையில் அங்கும் வான்வழி தாக்குதல் நடத்தப்படுகிறது.

இதனால் காசா நிலப்பரப்பின் எந்த ஒரு பகுதியும் அங்குள்ள மக்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை. தவிர 1948 முதல் பல்வேறு காலகட்டங்களில் இங்கிருந்து வெளியேறிய பாலஸ்தீனியர்களை மீள்குடியமர்த்த எந்தவொரு சர்வதேச அமைப்பும் இதுவரை முயற்சி எடுக்காததால் நம்பிக்கையிழந்துள்ள பாலஸ்தீனியர்கள் இந்த பகுதியை விட்டு வெளியேற அச்சமடைந்துள்ளனர்.

போர்நிறுத்தம் மூலம் இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலுக்கு ஐநா இறுதி தீர்வு காண வேண்டும். பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுவிக்க முயற்சி எடுக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு நாடுகள் ஐ.நா.வை வலியுறுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழல் அமெரிக்காவுக்கு தீவிரவாத அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது : ஜோ பைடன்