துபாயில் இருந்து சனிக்கிழமையன்று அம்ரிஸ்தர் வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் விமானம் கராச்சியில் அவரசமாக தரையிறக்கப்பட்டது.

பயணிக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாக ஊழியர்கள் விமானியிடம் தெரிவித்ததை அடுத்து அருகில் உள்ள கராச்சி சர்வதேச விமான நிலையத்தை தொடர்புகொண்ட விமானிக்கு அவசரமாக தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து விமான நிலைய மருத்துவர்கள் குழு அந்த பயணியை பரிசோதித்து அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளை மேற்கொண்டனர்.

சிகிச்சைக்குப் பின் பயணி தனது பயணத்தை தொடர மருத்துவர்கள் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து அவர் மீண்டும் அதே விமானத்தில் அம்ரிஸ்தர் வந்தடைந்தார்.

இதனால் அந்த விமானம் கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க நேரிட்டது.