மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலால் அமெரிக்காவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

ஹமாஸ் குழுவினரை முழுவதுமாக வேரறுப்பதன் மூலமே பாலஸ்தீனம் அமைவதற்கான வழி கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காசா பகுதியில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உட்பட 2500க்கும் மேற்பட்டோர் இதுவரை கொல்லப்பட்டுள்ள நிலையில் உணவு மற்றும் குடிநீர் கிடைக்காததால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் எச்சரித்துள்ளன.

மேலும், மருந்து தட்டுப்பாடு நிலவுவதால் காசா பகுதியில் உள்ள மருத்துவ உதவி மையங்கள் சுடுகாடாக மாறிவருவதாக அந்நாட்டில் உள்ள செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நடந்து வரும் மோதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பாலஸ்தீனத்துடனான மோதலில் இஸ்ரேல் போர் விதிகளுக்கு உட்பட்டு செயல்படும் என்று தான் நம்புவதாகவும், அமெரிக்க துருப்புக்களை நிலைநிறுத்துவது அவசியமில்லை என்றும் கூறினார்.

60 நிமிடங்களுக்கு மேல் நீடித்த இந்த பேட்டியில், ஹமாஸ் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று தான் நம்பும் அதே வேளையில், பாலஸ்தீன அரசுக்கு ஒரு பாதை இருக்க வேண்டும் என்றும், மத்திய கிழக்கின் அமைதியின்மையால் அமெரிக்காவில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.

காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது தவறு என்று எச்சரித்த அமெரிக்க அதிபர், ஹெஸ்புல்லா மற்றும் ஹமாஸை வெளியேற்றுவது அவசியமான தேவை என்று எச்சரித்தார்.

காசா பகுதியில் சிக்கியுள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் குடிநீர் மற்றும் உணவு விநியோகத்தை அனுமதிக்குமாறு அமெரிக்கா இஸ்ரேலுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்துவரும் இந்த போரில் இஸ்ரேல் தரப்பில் இதுவரை 1300 க்கும் அதிகமானோர் பலியானதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் காசா மீதான தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியிருப்பதை அடுத்து உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

பாலஸ்தீனத்துடனான இந்த போர் பிராந்திய மோதலாக உருவெடுப்பதைத் தடுக்கும் முயற்சியில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் பிளிங்கன் கடந்த வாரம் மத்திய கிழக்கில் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.

இந்த நிலையில் இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் தொலைபேசியில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பைடனை இஸ்ரேல் வர அழைப்பு விடுத்ததாக இஸ்ரேலிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த அழைப்பின் பேரில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விரைவில் இஸ்ரேலுக்கு வர வாய்ப்புள்ளதாகக் கூறப்பப்பட்டு வரும் நிலையில் வெள்ளை மாளிகை அதிகாரிகள் இதுகுறித்து உறுதியாக எதையும் தெரிவிக்கவில்லை.