சென்னை,

திமுகவின் இரு அணிகளுக்கு இடையே நாளை பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது பேச்சு வார்த்தை நடத்த ஏற்ற சூழல் நிலவுவதாக ஓபிஎஸ் கூறினார்.

ஜெ. மறைவை தொடர்ந்து அதிமுக இரு பிரிவாக பிரிந்துள்ளது. அதன் காரணமாக அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது.

இந்நிலையில், வர இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென்றால் இரட்டை இலை சின்னம் தேவை என்பதை  கருத்தில்கொண்டு இரு அணிகளையும் இணைக்க கட்சி நிர்வாகிகள் ஒருசிலர் முயற்சி செய்து வந்தனர்.

அதன் தொடர்ச்சியாக கடந்த திங்கட்கிழமை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகளுக்கு இடையே பேச்சு வார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், அமைச்சர் ஜெயக்குமார் போன்றோர் தெரிவித்த கருத்து காரணமாக பேச்சு வார்த்தை தடை பெற்றது.

தற்போது இரு அணிகளுக்கு இடையே பேச்சு வார்த்தை நடைபெற ஏற்ற சூழல் நிலவுவதாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்து உள்ளார்.

இந்த பேச்சுவார்த்தை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்றும் தெரிகிறது. இதற்கு ஏதுவாக இரண்டு அணிகளும் பேச்சுவார்த்தைக்கான குழுக்களை அமைத்துள்ளன.

இரு அணியினரும் பேச்சுவார்த்தையில், என்ன பேச வேண்டும் என்பது குறித்து தொடர் ஆலோசனைகள் செய்து வருகின்றனர்.

நாளை பேச்சு வார்த்தை நடைபெறுமா? என அதிமுக தொண்டர்கள் எதிர்பார்த்துள்ளனர்.