b
குழந்தைகளின் கற்றல் திறனை வளர்க்கும் விஜய் டிவியின் ஒருவார்த்தை ஒரு லட்சம், பேச்சுத்திறனை வளர்க்கும் மக்கள் டிவியின் குறளோடு தமிழ்பேசு போன்ற நாலைந்து நல்ல நிகழ்ச்சிகள் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் அத்தனை குழந்தை நிகழ்ச்சிகளிலும் ஆபாசம், வன்முறை.
இதை அரங்கேற்றும் ஊடகங்கள் ஒரு தண்டவாளம் என்றால், ஆதரிக்கும் பெற்றோர்கள் மறு தண்டவாளம். இதனால் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை நிகழ்ச்சிகள் ரயிலைப்போல நீண்டுகொண்டே செல்கிறது.

ஜூனியர் சூப்பர் ஸ்டார்
ஜூனியர் சூப்பர் ஸ்டார்

சனிக்கிழமை (19.11.2016) மதியம் சுமார் 3 மணி இருக்கும். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.   இது முழுக்க முழுக்க சிறுவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி. சிறுவர்கள் பெரியவர்களின் வேலையை செய்து கொண்டிருப்பார்கள்.
காதலிப்பது, கணவன் மனைவி சண்டை, விவாகரத்து, மாமியார் மருமகள் சண்டை இப்படியான பெரியவர் வேலைகள்.
என் கண்ணில் பட்டகாட்சியில், ஒரு குழந்தை இன்னொரு குழந்தையை காதலிக்கும். திருமண நேரத்தில் ஏதோ வரதட்சணை பிரச்சனை எழுகிறது. பெண்ணாக வேடமிட்ட குழந்தை அப்பா வேடமிட்ட குழந்தையிடம் சொல்லும், ‘த்தூ, நீ எல்லாம் ஒரு அப்பனா?’
இதைப் பார்த்தவுடன் எனக்கு பகீர் என்று இருந்தது.
நாம் சிறுவர்களாக இருந்தபோது அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று சொல்லித்தந்தார்கள். ஊடகங்கள் நீயும் ஒரு அப்பனா என்று சொல்லித்தருகிறது.
சன் மியூசிக்கில் ஒரு நிகழ்ச்சி வந்தது. டாடி எனக்கு ஒரு டவுட்டு. பிள்ளை அப்பனை போட்டு அடிப்பதுதான் அந்த நிகழ்ச்சியின் ஹை லைட். இப்போ அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை. அதற்குப்பதில் மாமா நீங்க எங்க இருக்கீங்க ஒளிபரப்பாகிறது. அது ஒன்றுமில்லை. அப்பா பிள்ளையை அடித்த இடத்தில் மனைவி கணவனை அடிப்பாள்.
சுட்டிப்பட்டாளம்
சுட்டிப்பட்டாளம்

கலைஞர் தொலைக்காட்சியில் ஓடி விளையாட்டு பாப்பா என்றொரு நிகழ்ச்சி. சினிமாவில் கதாநாயகனும் கதாநாயகியும் கட்டிப்பிடித்து ஆடிய பாட்டுக்கு குழந்தைகள் ஆடுவார்கள்.
ஐந்து வயது குழந்தை இன்னொரு குழந்தையிடம் அன்பே ஆரூயிரே என்று காதல் வசனம் பேசி நடிப்பதையும், ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து ஆடுவதையும் பெற்றோர்கள் பார்வையாளர் வரிசையில் இருந்து ரசித்துக் கொண்டு இருப்பார்கள். அப்போது பெற்றோர்களின் முகங்களில் பெருமிதம் பொங்கி வழியும்.
இதை, வளர்ந்தபிறகு செய்யப்போகிற வேலைக்கு இப்போதே பயிற்சி என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா? அல்லது வளர்ந்த பிறகு நீ இப்படித்தான் நடக்க வேண்டும் என்பதை கற்றுத் தருவதாக எடுத்துக்கொள்ள வேண்டுமா? புரியவில்லை.
கேட்டால் குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வருகிறோம் என்பார்கள். நீங்கள் வளர்த்தாலும் வளர்க்காவிட்டாலும் இந்தத் திறமை எல்லாம் வளர வளர தானாக வந்துவிடப் போகிறது. அதை இப்போதே வலிந்து வளர்த்து என்ன செய்யப் போகிறீர்கள்?
குழந்தைகளை குழந்தைகளாக வளர விடுங்கள். பெரியவர்களாக்கி சிறுமைப்படுத்தாதீர்கள். அவர்கள் குழந்தைகள். தாங்க மாட்டார்கள். ஊடக்த்தின் நோக்கம் வணிகம். பெற்றோர்களே உங்கள் நோக்கம் என்ன?
இம்மாதிரி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் குழந்தைகளின் பெற்றோர்கள் தன்பிள்ளை புகழடைந்து விட்டதாய் நினைக்கிறார்கள். வீட்டிலிருந்து நிகழ்ச்சியை பார்க்கும் பெற்றோர்கள் தன்பிள்ளைக்கு இந்த அரிய வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று ஏங்குகிறார்கள்.
இது கீழ்த்தரமான வெற்றியின் உத்தி. கீழ்த்தரமான தந்திரத்தால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்துவிட முடியாது என்றார் விவேகானந்தர். உங்கள் குழந்தைகள் மகத்தான சாதனை புரியவேண்டுமென்றால் இத்தகைய மலின நிகழ்ச்சியின் பிடியிலிருந்து நீங்களும் உங்கள் பிள்ளைகளும் முதலில் வெளியே வாருங்கள்.
குழந்தைகளை வைத்து நிகழ்ச்சி தயாரிப்பது தவறில்லை. அந்த நிகழ்ச்சி குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கும், உடல் வளர்ச்சிக்கும், திறன் வளர்ச்சிக்கும் உதவுவதாக இருக்க வேண்டும்.
பொழுது போக்கு தொலைக்காட்சிகள் நிகழ்ச்சி என்ற பெயரில் பாலியல் உணர்வை குழந்தைகளுக்குள் குடியேற்றினால், குழந்தை சேனல்கள் வன்முறையின் குரூரத்தை குடியேற்றுகிறது.
சுட்டி டிவியின் பொம்மி & பிரண்ட்ஸ், டோரா, சித்திரம் தொலைக்காட்சியின் திருக்குறள் கதைகள் இப்படி ஒருசில தவிர அனைத்து கார்ட்டூன்களும் அடி, உதை, குத்து, துப்பாக்கி சூடு இதைத்தான் குழந்தைகள் மீது அள்ளி அள்ளி வீசுகின்றன.
இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பார்த்து குழந்தைகள் கவனச் சிதறலிலும், கற்றல் குறைபாட்டிலும் சிக்கித் தவிக்கிறார்கள். பெற்றோர்கள் தொடர்கள் பார்த்து அழுதுகொண்டிருக்கிறார்கள்.
ஒரு ஆறுதல்:
சன் டிவியில் இமான் அண்ணாச்சி நடத்தும் “குட்டி சுட்டீஸ்” நிகழ்ச்சியைப்போலவே  மலையாளத்தில், சூர்யா டிவி ஒளிபரப்பி வந்த நிகழ்ச்சி ‘குட்டி பட்டாளம்’ நிகழ்ச்சி. இந் நிகழ்ச்சியில் குழந்தைகளை மனரீதியாக தொல்லைப்படுத்துவதாக  பலரும் புகார்  தெரிவித்தனர். மாநில குழந்தைகள் நல ஆணையத்துக்கும் புகார் தெரிவித்தனர். இதையடுத்து இந் நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கு மாநில குழந்தைகள் நல ஆணையம், நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. இதையடுத்து அந் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.
ஒரு வருத்தம்:
கேரளாவைப்போல இங்கே உரிய இடத்தில் புகார் தெரிவிக்க மக்கள் தயாராக இல்லை. குழந்தைகளுக்கான அமைப்புகளோ ஆணையங்களோ மோசமான, தொ.கா. நிகழ்ச்சிகளை கண்டுகொள்வதில்லை.