டில்லி:

ஈராக் வெளியுறவு துறை அமைச்சர் அல் ஜபாரி 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜை ஜவஹர்லால் நேரு பவனில் சந்தித்து பேசினார்.

இதன் பின்னர் அல் ஜபாரி நிருபர்கிடம் கூறுகையில், ‘‘கடந்த 2014ம் ஆண்டு மோசூலில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளால் பிணைக் கைதியாக கடத்தி செல்லப்பட்ட 39 இந்தியர்கள் உயிருடன் இருப்பதற்கான எவ்வித ஆதாரங்களும் கிடைக்கவில்லை.

அவர்கள் கொல்லப்பட்டதற்காக ஆதாரங்கள் இல்லை. அதனால் இது தொடர்பான தெளிவான தகவல்களை எங்களால் வழங்க முடியவில்லை. எனினும் அவர்களை கண்டுபிடிக்கும் பணியை அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்’’ என்று தெரிவித்தார்.

சுஸ்மா சுவராஜ் கூறுகையில்‘‘ அவர்கள் இறந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. அதனால் அவர்களை தேடும் பணியில் அரசாங்கம் தொடர்ந்து ஈடுபடும்’’ என்று தெரிவித்தார்.

கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் மோசூல் அருகே பணியாற்றிக் கொண்டிருந்த 40 இந்திய தொழிலாளர்களை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் கடத்தி சென்றனர். இவர்கள் அனைவரும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள்.

இதேபோல் இவர்களோடு கடத்தி செல்லப்பட்ட இரண்டு பங்களாதேஷ் தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டனர். 40 இந்தியர்களில் 39 பேரை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் சுட்டு கொன்றுவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.