டில்லி:

ராகுல்காந்தி காங் தலைவராக தொடர ஒரு சதவிகிதம் கூட சாத்தியமில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுல் ஒருவரான  வீரப்ப மொய்லி தெரிவித்து உள்ளார்.

கடந்த மாதம் நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில்  காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த நிலையில், கட்சியின்  தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார்.  ஆனால், அவரது ராஜினாமா ஏற்க கட்சியின் மூத்த தலைவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இருந்தாலும், தனது ராஜினாமா நிலையில் ராகுல் உறுதியாக உள்ளார்.

சமீபத்தில், பாராளுமன்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நடை பெற்றது. அதில் கலந்துகொண்ட தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பிக்கள்,  ராகுல் காந்தி ராஜிமானா முடிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக  தெரிவித்தனர். எனவே, ராகுல் காந்தி தலைவர் பொறுப்பை தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, “நான் தற்போது தலைவர் பொறுப்பில் கிடையாது. என்னுடைய ராஜினாமா முடிவில் மாற்றம் இல்லை. அந்த முடிவில் இருந்து பின்வாங்கவும் மாட்டேன்” என உறுதிபட கூறினார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி, ராகுல்காந்தி தலைவர் பதவியில் தொடர ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பில்லை என்றும், அவரது ராஜினாமா குறித்து காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூடி முடிவு செய்யும் என்று தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்க எவரும் முன்வராததால் அப்பதவியில் ராகுலே தொடர்வார் என்றும் தகவல்கள் வெளியாகின. மேலும்,  ராகுலின் சகோதரி பிரியங்காவை சிலர் முன்மொழிந்த நிலையில், அதற்கு சில மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இதுவரை தலைவர் பதவிக்கு யாரையும் தேர்வு செய்ய முடியாமல் இழுபறி நீடித்து வருகிறது.

மகாராஷ்டிரா, அரியானா  மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்மன்ற  தேர்தலும் நெருங்கி வருகிறது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் தேர்வு செய்யப்படுவதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.