சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிறந்தநாள் விழாவில் வடமாநில தலைவர்கள் பங்கேற்றதால் பொறாமைப்பட்டு, சிலர்  வதந்தி பரப்புகின்றனர், என வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

மேலும்,  சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” “தமிழ்நாட்டில் மட்டும் தான் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்” என்றார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் சில வீடியோக்கள் வேகமாக பரவின. இந்த வீடியோவை ஷேர் செய்தவர்கள், “தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள்” என்று தலைப்பிட்டு இருந்தனர். தமிழ்நாட்டில் இந்த வீடியோக்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை என்றாலும், வட மாநிலங்களில் குறிப்பாக பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வீடியோ சலசலப்பை ஏற்படுத்தியது.

பாஜகவினர் இந்த விவகாரத்தை பீகார் மாநில சட்டமன்றத்தில் பிரச்னையாக எழுப்பினர். கடந்த இரு நாட்களாக அம்மாநில சட்டமன்றத்தில் பாஜக எம்எல்ஏக்கள் வீடியோ குறித்து ‘பீகார் தொழிலாளிகளுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை’ என்று குற்றம் சாட்டி அமளியில் ஈடுபட்டனர்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், ‘இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி விளக்கமளித்துள்ளார். இக்குற்றச்சாட்டு உண்மை கிடையாது’ என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபியும் விளக்கம் அளித்துள்ளார்.  “தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் மற்றும் இந்தி பேசும் மக்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களிலும், பிற ஊடகங்களிலும் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வுகளின் உண்மை தன்மையை சரி பார்க்காமல் வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இது முழுக்க முழுக்க வதந்தியாகும். எனவே தயவு செய்து இதுபோன்ற வதந்திகளை நம்பி பரப்ப வேண்டாம். வதந்திகள் பரப்புவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து இருந்தார்.

மேலும் வைரலான வீடியோக்களில்  ஒன்று திருப்பூரில் பீகார் தொழிலாளர்களுக்கும், ஜார்கண்ட் தொழிலாளர்களுக்கும் இடையே நடந்த மோதல். மற்றொரு வீடியோ, கோவையில் உள்ளூர் மக்கள் மோதிக்கொண்ட சம்பவம்.

எனவே தமிழர்களால் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக கூறும் தகவலில் உண்மையில்லை. ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் சட்டம் ஒழுங்கை திறம்பட செயல்படுத்தும் மிகவும் அமைதியான மற்றும் பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. என்று அறிவித்துடன், திருப்பூரில் வடமாநிலத்தவர்களுக்கென தொலைபேசி இணைப்புடன் கூடிய பாதுகாப்பு மையமும் திறக்கப்பட்டு உள்ளது.

ஆனால்,  பீகார் பாஜக எம்எல்ஏக்கள்  தமிழகஅரசின்  விளக்கத்தை ஏற்க மறுத்து தொடர் அமளியில் ஈடுபட்டனர். மேலும், தமிழ்நாட்டுக்கு பீகார் அதிகாரிகள் கொண்ட உண்மை அறியும் குழு அனுப்பப்பட வேண்டும் என்றும் கூறினர்.

தொடர் அமளி காரணமாக அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து தமிழ்நாட்டுக்கு பீகார் காவல்துறை அதிகாரிகள் சனிக்கிழமையன்று செல்வார்கள் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நான்கு பேர் கொண்ட இக்குழு பாஜகவின் குற்றச்சாட்டு குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

இந்த நிலையில், செய்தியளார்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  முதல்வரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் வடஇந்திய தலைவர்கள் கலந்துகொண்டதை கண்டு பொறாமைப்படும் சிலர், வடஇந்திய தொழிலாளர்கள் மீது தாக்குதல் என வதந்தி பரப்புகின்றனர். சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.