சென்னை:  தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பரவிய வதந்திகளைத்  தொடர்ந்து, காவல்துறை சார்பில், உதவி மையம் திறக்கப்பட்டு உள்ளது. அதில், கடந்த  2 நாளில் 219 அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல, வட மாநிலங்களுக்கு திரும்பும் தொழிலாளர்கள், ஹோலி கொண்டா ஊருக்கு போறோம், திரும்பி வருவோம் என கூறியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக 2 விடியோக்கள் பரவி வைரலானது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பீகார் சட்டப்பேரவையில் பிரச்சனை எழுப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் கொண்ட குழு தமிழ்நாடுக்கு வருகை தருகிறது.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து திருப்பூர், ஈரோடு பகுதிகளில் பணியாற்றி வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். ஏற்கனவே ஈரோடு பகுதியில் தேர்தல் காரணமாக பொதுமக்கள் மட்டுமின்றி, வடமாநில தொழிலாளர்களும் பணத்தைக்கொடுத்து மந்தைப்போல அடைக்கப்பட்டிருந்த நிலையில்,  அங்கு தொழிற்நிறவனங்கள் ஆட்களின்றி வெறிச்சோடி கிடந்த நிலையில்,  தற்போது,  வடமாநிலத்தவர்கள்  தாக்கப்படுவதாக எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து ஏராளமானோர் சொந்த ஊர் திரும்பிச் செல்கின்றனர்.

இதனால், கொங்குப்பகுதி நிறுவனங்களில் வேலைக்கு ஆட்களின்றி, பல தொழில்கள் முடங்கி வருகின்றன. இதனால், பல தொழில் நிறுவன கூட்டமைப்பினர், அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையடுத்து,   வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான வீடியோ போலியானது என காவல்துறை தரப்பில் மீண்டும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  மேலும், வடமாநிலத்தவர்களுக்கு என பிரத்யேக உதவி மையமும் ஏற்படுத்தப்பட்டு, அதற்கென தனி தொலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டு உள்ளது.ஹ

இதற்கிடையில், தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியவர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது என காவல்துறை அறிவித்துள்ளது.

திருப்பூரில் அமைக்கப்பட்டுள்ள வட மாநில தொழிலாளர்களுக்காக பிரத்யேக உதவி மையம் 2 நாளில் 219 அழைப்புகள் வந்துள்ளதாக போலீசார் தகவல் வட மாநிலங்களில் இருந்து அதிக அழைப்புகள் வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சொந்த ஊர்களுக்கு திரும்பும் வடமாநில தொழிலாளர்கள், தாங்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடவே சொந்த ஊருக்கு போகிறோம். எங்களுக்கு தமிழ்நாட்டில் எந்தவொரு பாதிப்பும் இல்லை, நாங்கள் பாதுகாப்பாகவே இருக்கிறோம். ஹோலி பண்டிகை முடிந்ததும் தமிழ்நாடு திரும்புவோம் என்று கூறி வருகின்றனர்.