சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் விலக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்த மாத ( ஜனவரி) இறுதி  நாளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ந்தேதி தொடங்கியது. தொடக்கம் முதலே பரவலாக மழை பெய்து வந்தது. சுமார் 3 மாதம் காலம் பருவமழை காலம் நீடிக்கும் நிலையில், இந்த ஆண்டு தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதனால், பருவமழை ஜனவரி இறுதி வரை நீடிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இதனால் பருவமழையையொட்டி, விவசாயம் செய்த விவசாயிகள் பருவம் மாறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கடுமையாக சேதமடைந்தன. இந்த நிலையில், இன்னும் சில நாட்களில் பருவமழை விலக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் 28-ந்தேதி தமிழகம், புதுவை, காரைக்காலில் வரை மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

ஜனவரி  30-ந்தேதி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

ஜனவரி  31-ந்தேதி கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

வடகிழக்கு பருவமழை அடுத்த 2 தினங்களில் தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலக வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.